’நீதித்துறையோ, அரசோ, நாடாளுமன்றமோ உயர்வானவை அல்ல...’ - தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் மே 13 அன்று நிறைவடைந்ததை அடுத்து, தனது பணியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய், பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு பாராட்டு விழாவையும், மாநில வழக்குரைஞர்களின் கருத்தரங்கையும் மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
இதில் பங்கேற்று பேசிய, நீதிபதி பி.ஆர்.கவாய், “ நாடு வலுப்பட்டுள்ளது மட்டுமின்றி சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதித்துறையோ, அரசோ, நாடாளுமன்றமோ உயர்வானவை அல்ல; இந்தியாவின் அரசமைப்புச் சட்டமே உயர்வானது.
அதன் மூன்று தூண்களும் அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும். நாட்டின் அடித்தளம் வலுவாக உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்று தூண்களும் சரிசமமானவை. அவை மூன்றும் பரஸ்பரம் மரியாதை அளித்துச் செயல்பட வேண்டும்.” என்றார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவமதிக்கப்பட்டாரா?
இந்நிலையில், தன்னை வரவேற்க மாநில தலைமை செயலாளர், காவல்துறை ஆணையர் ஆகியோர் வரவில்லை எனக் நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் தெரிவித்திருந்தார். இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில், விசிக எம்பி ரவிக்குமார்.
” மாண்பமை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவமதிக்கப்பட்டாரா?
தலைமை நீதிபதி கவாய் அவர்கள் மும்பையில் இன்று தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றுப் பேசும்போது வழக்கமான அரசாங்க மரபு ஒழுங்குகளில் ( protocol) தனக்கு நம்பிக்கை இல்லை எனினும் “ அரசியலமைப்பின் அங்கங்கள் ஒவ்வொன்றும் மற்ற அங்கங்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்த வேண்டும்.
இந்த மாநிலத்தின் மகன், நாட்டின் தலைமை நீதிபதியாகி முதல் முறையாக மகாராஷ்டிரா வரும்போது, மாநிலத்தின் தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் முதலானவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பவில்லையென்றால், அதை அவர்களின் அறிவார்ந்த சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். “ இத்தகைய சிறிய பிரச்சனைகளில் நான் கவனம் செலுத்த விரும்பவில்லை.
இருந்தாலும் இதை சுட்டிக்காட்டத் தோன்றியது” என அவர் தெரிவித்துள்ளார். மாண்பமை தலைமை நீதிபதியின் நிகழ்ச்சியைப் புறக்கணித்தது மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலாளர், காவல் ஆணையர் ஆகியோரின் தனிப்பட்ட முடிவா ? அல்லது மகாராஷ்டிர மாநில அரசு அவர்கள் அப்படி அவமரியாதை செய்ததை ஆதரிக்கிறதா? என்பதை மகாராஷ்டிர மாநில அரசு விளக்கினால்தான் நாட்டுக்குத் தெரியும்." என்று தெரிவித்துள்ளார்.