அமலாக்கத்துறையில் சோனியா காந்தி ஆஜராக சம்மன் -நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

அமலாக்கத்துறையில் சோனியா காந்தி ஆஜராக சம்மன் -நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு
அமலாக்கத்துறையில் சோனியா காந்தி ஆஜராக சம்மன் -நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

சோனியா காந்தி வருகிற 21-ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும் போது நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
 
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில் கூட்டத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் மூத்த தலைவர்கள் அடங்கிய வியூக குழு கூட்டம் சோனியா காந்தியின் இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம், மல்லிகார்ஜுனா கார்கே, மனீஷ் திவாரி, மாணிக்கம் தாக்கூர் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அக்னிபத் திட்டம் பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, வேலை வாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு குறித்து விரிவாக  ஆலோசிக்கப்பட்டது. அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த சோனியா காந்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து இன்று நேரில் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு காங்கிரஸ் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் 'புதிய தலைமுறை'க்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''மழைக்காலக் கூட்டத் தொடரில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, அக்னிபத் திட்டம், வேலைவாய்ப்பின்மை, இந்தியாவில் ஏற்பட்டுள்ள மதவெறுப்பு, மத்திய அரசு கவர்னர்களின் உதவியுடன் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்ப சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் எங்கள் நிலை என்பது காங்கிரஸ் கட்சி சபை மாண்பிக்கு எதிரான வார்த்தைகள் குறித்து அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசித்து ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு "குஜராத் மாடல்" போன்று ஊழல், எதிர்ப்பு உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என சொல்லி இருக்கிறது.

குஜராத் சட்டசபையில் என்ன திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்களோ அதே திட்டத்தை தற்போது மத்திய அரசு நாடாளுமன்றத்திலும் கொண்டு வந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் சில வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் மற்றும் துணை குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன்னுடைய உடல்நிலை பாதிப்பை மீறி இன்றைய தினம் கூட்டத்தை நடத்தியுள்ளார். இந்திய தேசத்திற்காக பல்வேறு தியாகங்களை செய்த சோனியா காந்தியை துன்புறுத்தும் வகையிலும், அவரை பழிவாங்கும் விதமாகவும் அமலாக்கத்துறை வருகிற 21-ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருக்கிறது. காங்கிரஸ் தலைவரை அவமானப்படுத்தும் வகையில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வர சம்மன் அனுப்பி இருக்கிறது'' என்றார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாநில தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் சோனியா காந்தி வருகிற 21-ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும் போது நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவும், தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் முக்கிய தலைவர்கள் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதையும் படிக்கலாம்: கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com