நாளை எதிர்க்கட்சிகள் கூட்டம்: காங்கிரஸ் அழைப்பு
மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நாளை எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகிறார்கள். ராகுல் காந்தியும் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க நாளை எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தின் போது எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கான தங்களது வியூகத்தையும் எதிர்க்கட்சிகள் விவாதிக்கும் எனவும் தெரிகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும் ஒப்புகைச்சீட்டுகளுக்கும் முரண்பாடுகள் இருந்ததாக எழுந்த புகார்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் ஜூன் ஒன்றாம் தேதி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை நாடாளுமன்ற மைய அரங்கில் நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

