அமராவதி நில முறைகேடு: எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு!

அமராவதி நில முறைகேடு: எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு!
அமராவதி நில முறைகேடு: எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு!

அமராவதி நில முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது ஆந்திர மாநில குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. மங்களகிரி ஒய்.எஸ்.ஆர். கட்சி எம்.எல்.ஏ அல்லா ராம கிருஷ்ண ரெட்டி (நானி) அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கையில், முன்னாள் நகராட்சி நிர்வாக மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பொங்குரு நாராயணாவும் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மார்ச் 23-ம் தேதி விஜயவாடாவில் உள்ள சிஐடி மண்டல அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிஐடி அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எஃப்.ஐ.ஆரின் படி, எம்.எல்.ஏ.வின் புகார் பிப்ரவரி 24 அன்று மாநில சி.ஐ.டி கூடுதல் போலீஸ் இயக்குநர் பி.வி.சுனில்குமாரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மங்களகிரி தொகுதியைச் சேர்ந்த ஒரு சில விவசாயிகள், எம்.எல்.ஏ.வை அணுகியதாக புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"முந்தைய தெலுங்கு தேச அரசு, சட்டவிரோதமாக மக்களின் நிலங்களை அபகரித்து அவர்களை ஏமாற்றியது. நிலங்களைப் பற்றிய குழப்பம் மற்றும் பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தின் கீழ் வைத்திருப்பதன் மூலம் மோசடி செய்துள்ளனர். அதாவது, பயமுறுத்தி நிலங்களை கையப்படுத்தியுள்ளனர். இந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இடைத்தரகர்கள் குழு இருந்துள்ளது. எந்த இழப்பீடும் இல்லாமல் அரசுக்கு நிலங்கள் கையப்படுத்தப்பட்டுள்ளன. சந்திரபாபு நாயுடு மற்றும் நாராயணா செய்த முறைகேடுகள் எஸ்சி மற்றும் எஸ்டி சமூக மக்களுக்கும் பலவீனமான பிரிவுகளுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளன" என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

புகாரின் ஆரம்ப விசாரணையின் அடிப்படையில், சிஐடி டிஎஸ்பி எஸ்.சூர்யா பாஸ்கர் ராவ் மார்ச் 12 அன்று ஓர் அறிக்கையை சமர்ப்பித்தார். இதில், குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பிரிவுகள் மற்றும் எஸ்சி / எஸ்டி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் ஆந்திரப் பிரதேச ஒதுக்கப்பட்ட நிலங்களின் பிரிவு 7 (இடமாற்றத் தடை) சட்டம், 1977-ன் கீழ் சந்திரபாபு நாயுடு மற்றும் நாரயணா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிலும், சிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமை பதிவு செய்த எஃப்.ஐ.ஆரில், ஏ1 குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, க்விட் ப்ரோ வழக்கில் ஆந்திர மாநிலத்தின் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏ1 குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ளார். அதை வைத்து தெலுங்கு தேசம் கட்சியினர் எப்போதும் ஜெகனை சாடுவது உண்டு. இப்போது சந்திரபாபு நாயுடுவும் ஏ1 குற்றம்சாட்டப்பட்டவராக போலீஸ் எப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் அரசியல் சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.

இதற்கிடையே, தெலுங்கு தேசம் மாநிலத் தலைவர் கிஞ்சராபு, இந்த வழக்கு தொடர்பாக பேசுகையில், ``இந்த நடவடிக்கை ஆளும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி.-யின் பழிவாங்கும் செயல். எங்கள் அரசு விவசாயிகளின் ஒப்புதலுடன் மூலதனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்தியது. நாட்டின் வரலாற்றில் எஸ்சி / எஸ்டி சட்டத்தின் கீழ் ஏதேனும் முன்னாள் முதல்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவில்லை" என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com