நடப்பாண்டில் நாட்டில் நெல் உற்பத்தி குறையும் என மத்திய அரசு தகவல்... காரணம் என்ன?

நடப்பாண்டில் நாட்டில் நெல் உற்பத்தி குறையும் என மத்திய அரசு தகவல்... காரணம் என்ன?
நடப்பாண்டில் நாட்டில் நெல் உற்பத்தி குறையும் என மத்திய அரசு தகவல்... காரணம் என்ன?

நாட்டின் கிழக்கு மாநிலங்களில் மழை குறைந்ததால் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் உற்பத்தி குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிக மழைப்பொழிவால் வெள்ளப்பெருக்கு உண்டான நிலையில், நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்வேறு மாநிலங்களில் மழைபொழிவு இந்த பருவமழை காலத்தில் இயல்பைவிட குறைவாகவே உள்ளதால் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லை. அதேபோல உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய வட இந்திய மாநிலங்களிலும் பருவமழை வழக்கத்தைவிட குறைவாகவே இந்த இந்த வருடம் பதிவாகியுள்ளது.

10 மில்லியன் வரை குறையப் போகும் நெல் உற்பத்தி

போதிய அளவு பருவமழை இல்லாததால் இந்த மாநிலங்களில் கரீப் பருவ நெல் விதைப்பு சென்ற வருடத்தை விட குறைந்துள்ளதாக மாநிலங்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது. 2020-21ஆம் வருடத்தில் 124 மில்லியன் டன்னாக இருந்த நாட்டின் நெல் உற்பத்தி 2021-22ஆம் வருடத்தில் 130 மில்லியன் டன்னாக அதிகரித்தது. இது நடப்பு ஆண்டில் மேலும் அதிகரித்து புதிய சாதனை படைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல மாநிலங்களில் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த வருட நெல் உற்பத்தி 120 டன்னாக குறையலாம் என அச்சம் எழுந்துள்ளது. அதாவது சென்ற ஆண்டை விட நெல் உற்பத்தி இந்த ஆண்டில் பத்து மில்லியன் டன் வரை குறைவாக இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

கையிருப்பு இருப்பதால் கவலை தேவையில்லை - மத்திய அரசு

மத்திய அரசிடம் தற்போது 47 மில்லியன் டன் நெல் இருப்பில் உள்ளது என்பதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் கருதுகிறார்கள். பொதுவாக அரசிடம் 15 மில்லியன் டன் நெல் ஸ்டாக் இருந்தாலே தட்டுப்பாடுகளை தற்காலிகமாக தவிர்த்து விடலாம் என்பது கணிப்பு. அந்த அளவைவிட பல மடங்கு இருப்பு கடந்த இரண்டு வருட சிறப்பான விளைச்சல் காரணமாக மத்திய அரசிடம் உள்ளது.

இலவச அரிசி விநியோகம் தொடரும் - மத்திய அரசு

கோவிட் பெருந்தொற்று பாதிப்பு காரணமாக பொதுமுடக்கம் அமலாக்கப்பட்டதால், மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலம் ஒவ்வொரு மாதமும் 5 கிலோ கூடுதல் உணவு தானியங்களை இலவசமாக வழங்கி வருகிறது. ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் மற்றும் ஒரு கிலோ கோதுமை மூன்று ரூபாய் என்று மானிய விலையில் அளிக்கப்படும் உணவுப் பொருட்களை தொடர்ந்து ரேஷன் கடைகள் அளித்து வரும் நிலையில், கூடுதலாக 5 கிலோ இலவச உணவு தானியங்கள் 80 கோடி ஏழை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படுகின்றன.

நெல் ஏற்றுமதிக்கு ஏற்கனவே கூடுதல் வரி விதிப்பு

ஏற்கனவே தனியார் பெரும் அளவில் கோதுமையை கொள்முதல் செய்திருப்பதால், ராபி பருவ கோதுமை கொள்முதல் குறைந்துள்ளது. இதனால் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேபோல தற்போது நெல் மற்றும் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி குருணை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு சந்தைகளில் ஏற்கனவே 10 சதவீதம் வரையில் அரிசி விலை உயர்ந்துள்ள நிலையில் மேலும் அதிகரிப்பு இல்லாமல் தவிர்க்கப்படும் என மத்திய அரசு கருதுகிறது.

நெல் பயிரிடும் பரப்பு பரவலாக குறைவு

சென்ற வருடம் கரிப்பருவத்தில் 407 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்ட நிலையில், இந்த வருடம் ஆகஸ்ட் இறுதிவரை 384 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மழைப்பொழிவு குறைந்ததால் நெல் சாகுபடி பரப்பளவு 10 லட்சம் ஹெக்டேர் வரை குறைந்துள்ளது. அதேபோல மேற்கு வங்கத்தில் ஐந்து லட்சம் ஹெக்டேர் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நான்கு லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது.

இதைத் தவிர மத்திய பிரதேசத்தில் ஆறு லட்சம் ஹெக்டேர், உத்தர பிரதேச மாநிலத்தில் 3 லட்சம் ஹக்டேர் மற்றும் பீகார் மாநிலத்தில் 2 லட்சம் ஹெ்டேர் நெல் சாகுபடி பரப்பளவு குறைந்திருப்பதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. பிற மாநிலங்களில் நெல் உற்பத்தி ஓரளவுக்கு அதிகரிக்கும் என்றாலும், இந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பருவ மழை பற்றாக்குறை காரணமாக, நாட்டின் நெல் உற்பத்தி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

பரவலாக மழை பொழியாததே காரணம்:

இந்தப் பருவ மழை காலத்தில் கர்நாடகா, குஜராத், அசாம், மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மழை பொழிவு வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. மேலும் கேரளா, மகாராஷ்டிரா, மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் இயல்பான அளவில் இருந்தது. நாடு முழுவதும் பருவ மழை அளவு வழக்கத்தை விட ஓரளவு அதிகமாகவே இருந்தாலும், சில மாநிலங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது பருவ மழை பரவலாக பொழியவில்லை என்பதை காட்டும் வகையில் உள்ளது.

ஒரு சில பகுதிகளில் கனமழை மற்றும் பிற பகுதிகளில் வறட்சி என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது. பாகிஸ்தானில் பெருவெள்ளம் காரணமாக உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீன நாட்டின் பல்வேறு பகுதிகளில் வறட்சி காரணமாக உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் உலகம் முழுவதும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு ஆகியவை பரவலாக தற்போது காணப்படுகின்றன.

- கணபதி சுப்பிரமணியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com