வதந்திகள் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு வாட்ஸ்அப் நிர்வாகத்தை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.மேலும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் நிர்வாகங்களின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
பசு வதை மற்றும் குழந்தை கடத்தல் தொடர்பாக, வாட்ஸ்அப் மூலம் அண்மைக் காலத்தில் பரவிய வதந்திகளால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களால் 20க்கும் மேற்பட்டோர் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வுகள் நடந்தன. இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்குமாறு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், வாட்ஸ்அப் நிர்வாகமான ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தலை அனுப்பியுள்ளது. வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைகள் நடைபெறக் காரணமாகும் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதில் தங்களுக்கான பொறுப்பு மற்றும் கடமையை வாட்ஸ்அப் நிர்வாகம் தட்டிக்கழிக்க முடியாது என்று தொலைத் தொடர்பு மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சகம் அனுப்பிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் நிர்வாகங்களின் கூட்டத்தை விரைவில் நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, போலி தகவல்கள், வதந்திகளைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக வாட்ஸ்அப் நிர்வாகம் உறுதியும் அளித்துள்ளது.