குழந்தை பிறந்தால் மகிழ்ச்சிதானே அடைவார்கள் - ஆற்றில் குதித்த தொழிலதிபர்! திருந்தாத சமூகம்!

குழந்தை பிறந்தால் மகிழ்ச்சிதானே அடைவார்கள் - ஆற்றில் குதித்த தொழிலதிபர்! திருந்தாத சமூகம்!
குழந்தை பிறந்தால் மகிழ்ச்சிதானே அடைவார்கள் - ஆற்றில் குதித்த தொழிலதிபர்! திருந்தாத சமூகம்!

தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறந்ததால், தொழிலதிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வாசுதேவ் பாட்லே. தொழிலதிபரான வாசுதேவ் பாட்லேவுக்கு திருமணமாகி 6 மற்றும் 4 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளன. இதனிடையே, பாட்லேயின் மனைவி மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். அவருக்கு சமீபத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மனைவிக்கு மீண்டும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் வாசுதேவ் மிகுந்த விரக்தி அடைந்துள்ளார். பாட்லேவுடன் உடன்பிறந்தவர்கள் 4 பேர். இதில் அவர் மட்டுமே ஆண். இந்த நிலையில் தனக்கும் 4 பெண் குழந்தைகள் பிறந்துள்ளதை நினைத்து வருந்தியதாகத் தெரிகிறது.

இந்த நிலையில்தான், மனைவி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் இருந்து வாசுதேவ் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் வனிகங்கா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட வாசுதேவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாலாகாட் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் கமல் சிங் கெலாட், ”அவரது உடல் வனிகங்கா ஆற்றில் எடுக்கப்பட்டது. மாவட்ட மருத்துவமனையில் அவரது மனைவி இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு பாட்லே மிகவும் மனமுடைந்து போனார். தொழிலதிபர் வாசுதேவிற்கு சொந்தமாக 20 ஏக்கர் நிலம் உள்ளது” என்றார்.

இதுகுறித்து அவருடைய குடும்ப நண்பர்கள், “வாசுதேவ், தனது மனைவிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்த பிறகு, ’சில மருந்துகள் வாங்க வேண்டும்’ எனக் கூறி மருத்துவமனையை விட்டு வெளியில் சென்றார். அதற்குப் பிறகுதான் இந்த முடிவை எடுத்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பாலகாட் மக்கள் தொடர்பு துறை அதிகாரி அனில் பாட்லே கூறுகையில், ”மாவட்டத்தில் சிறந்த அளவில் பாலின விகிதம் உள்ளது. 1000 ஆண்களுக்கு 1022 பெண்கள் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். இன்றைய உலகில் பெண்கள், எல்லாத் துறைகளிலும் முன்னேறி சாதித்து வரும் நிலையில், மேற்கொண்டு பெண் குழந்தைகள் பிறந்ததற்காக தந்தை ஒருவர் உயிரிழந்தது பேசுபொருளாகி இருக்கிறது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com