மகாராஷ்டிரா: முகநூல் நேரலையிலேயே உத்தவ் தக்கரே பிரிவு அரசியல் பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை!

மகாராஷ்டிரா மும்பையில் முகநூல் நேரலையில், உத்தவ் தக்கரே அணியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் மக்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.
Shiv Sena leader (UBT)
Shiv Sena leader (UBT)PT

மகாராஷ்டிராவில் உத்தவ் தக்கரே அணியைச் சேர்ந்த மூத்த தலைவர் வினோத் கோசல்கரின் மகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிகழ்வு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வினோத் கோசல்கரின் மகன் அபிஷேக் கோசல்கர் (Abhishek Ghosalkar) தனது தந்தையைப்போல அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அபிஷேக் நேற்று மாலை, தஹிசார் பகுதியில் மௌரிஸ் நுராகா (Mauris Noronha) என்பவருடன் இணைந்து முகநூல் நேரலையில் உரையாடிக் கொண்டிருந்தனர்.

முன்னதாக மௌரிஸ் நுராகாவுக்கும் அபிஷேக்கிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும், பின் சமாதான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவரும் இணைந்ததாக கூறப்படுகிறது. இதை உணர்த்தும் விதமாகவே நோரோன்ஹாவில் நடைபெற்ற தனது நிகழ்ச்சியில் பங்கேற்க அபிஷேக் கோசல்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார் மௌரிஸ் நுராகா. அந்த நேரலை முடிவுற்ற சமயத்தில், மௌரிஸ் நுராகா திடீரென எழுந்து சென்றிருக்கிறார்.

அதன்பிறகு இரண்டு நிமிடங்களில் அபிஷேக் கோசல்கர் முகநூலில் தனது உரையாடலை முடித்துக்கொண்டு எழுந்துள்ளார். அப்போது மௌரிஸ் நுராகா அவரை துப்பாக்கியால் வயிறு மற்றும் தோள்பட்டையில் மூன்றுமுறை சுட்டுவிட்டு தானும் அதே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

மூன்று தோட்டாக்கல் பாய்ந்து ஆபத்தான நிலையில் இருந்த அபிஷேக் கோசல்கரை அங்கிருந்தோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.

இதில் மௌரிஸ் நுராகாவின் மீது ஏற்கெனவே குற்றவழக்கு இருப்பது தெரியவந்துள்ளது. அவர் எதற்காக அபிஷேக் கோசல்கரை சுட்டார் அல்லது வேறு யாராவது இதில் ஏதேனும் கோணத்தில் சம்பந்தப்பட்டிருக்க கூடுமா என்று போலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தற்போது மௌரிஸ் நுராகா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்.

மகாராஷ்டிராவில் குற்றங்கள் அதிகளவில் அதிகரித்து வரும் நிலையில் ஒரு அரசியல் பிரமுகர் முகநூலில் பேசிக்கொண்டிருக்கும் போதே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தஹிசார் பகுதியில் உள்ள MHB காலனி காவல் நிலைய எல்லைக்குள் நடந்த இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com