நாடு முழுவதும் மூன்று கோடி குடும்பங்களை சந்திக்க பாஜக திட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அதுகுறித்த தெளிவான விளக்கம் அளிப்பதற்கான பரப்புரை கூட்டம் நடத்துவது என பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.
பாரதிய ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எழுந்திருக்கும் எதிர்ப்பு குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதாவின் மாநில தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதாவின் பொதுச் செயலாளர் பூபேந்தர், அடுத்த 10 நாட்களுக்குள் மூன்று கோடி குடும்பங்களை சந்தித்து குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்கப் போவதாக கூறினார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், 250-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சந்திப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளின் பொய்களை விளக்கி, சட்டத்தில் உள்ள உண்மைகளை எடுத்துரைக்கப் போவதாகவும் தெரிவித்தார். முன்னதாக கூட்டத்தின்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் மேற்கொண்டு வரும் சதியை அம்பலப்படுத்த வேண்டும் என கட்சியினரிடம் ஜே.பி. நட்டா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

