அறிமுகமாகியது 'அக்னிபாத்' திட்டம் - இனி 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரியலாம்!

அறிமுகமாகியது 'அக்னிபாத்' திட்டம் - இனி 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரியலாம்!
அறிமுகமாகியது 'அக்னிபாத்' திட்டம் - இனி 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரியலாம்!

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிய வகை செய்யும் 'அக்னிபாத்' திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் குறுகிய கால மற்றும் நிரந்தர அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். குறுகிய கால அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 10 ஆண்டுகளும், நிரந்தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோர் ஓய்வு பெறும் வயது வரையிலும் பணிபுரிய முடியும். இதில் குறுகிய கால அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விருப்பப்பட்டால் தனது பணிக்கால முடிவில் 4 ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெற்றுக் கொள்ளலாம். இதுவே இந்திய ராணுவத்தில் தற்போது வரை பின்பற்றப்படும் நடைமுறையாக இருந்தது.

இந்நிலையில், ராணுவத்தில் அதிக அளவில் இளைஞர்களை சேர்க்கும் வகையிலும், வேலைவாய்ப்பை பெருக்கும் விதமாகவும் 'அக்னிபாத்' என்ற திட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது. இந்த திட்டத்துக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதுதொடர்பான சில முக்கிய அம்சங்களை இங்கு சுருக்கமாக பார்ப்போம்.

1. அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் (ராணுவம், விமானப்படை, கடற்படை) இளைஞர்களும், இளம்பெண்களும் சேரலாம். 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர தகுதியானவர்கள் ஆவர்.

2. ராணுவத்தில் சேருவதற்கு இப்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உடற்தகுதிகளே அக்னிபாத் திட்டத்தில் சேருபவர்களுக்கும் பொருந்தும். 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

3. அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு முதலாம் ஆண்டில் வருடத்துக்கு ரூ.4.76 லட்சம் ஊதியமும், கடைசி, அதாவது 4-வது ஆண்டில் வருடத்துக்கு ரூ.6.92 லட்சம் சம்பளமும் வழங்கப்படும். பணி நிறைவின் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 11.7 லட்சம் (சேவை நிதி) வழங்கப்படும்.

4. மொத்தம் 45 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர். 4 ஆண்டு பணிக்காக இவர்களுக்கு 6 மாத பயிற்சி வழங்கப்படும்.

5. பணிக்காலம் முடிவடைந்ததும் தேர்வு செய்யப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் நிரந்தர ராணுவப் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர். அவர்களின் விருப்பம், பணித் திறன் மற்றும் பங்களிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்த நடவடிக்கை இருக்கும். மீதமுள்ள 75 சதவீதம் பேர் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

6. பணிக்காலத்தில் வீர மரணம் அடையும் அக்னிபாத் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடியும், அவர்கள் பணிபுரிந்திருக்க வேண்டிய காலத்துக்கான ஊதியமும் வழங்கப்படும்.

7. பணியின் போது அக்னிபாத் வீரர்கள் உடல் ஊனமுற்றால் அவர்களுக்கு வட்டியுடன் கூடிய முழு சேவை நிதியும், அவர்கள் பணிபுரிந்திருக்க வேண்டிய காலத்துக்கான ஊதியமும் வழங்கப்படும். இதுதவிர, ஊனத்தின் தீவிரத்தை பொறுத்து அவருக்கு ரூ.46 லட்சம் வரை வழங்கப்படும்.

8. இன்றில் இருந்து 90 நாட்களுக்கு பிறகு அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com