‘இந்திய வரலாற்றில் நீங்கா வடு’ - மும்பை தாக்குதலின் 10ஆம் ஆண்டு தினம் இன்று

‘இந்திய வரலாற்றில் நீங்கா வடு’ - மும்பை தாக்குதலின் 10ஆம் ஆண்டு தினம் இன்று
‘இந்திய வரலாற்றில் நீங்கா வடு’ - மும்பை தாக்குதலின் 10ஆம் ஆண்டு தினம் இன்று

166 பேர் கொல்லப்பட்ட மும்பை தீவிரவாத தாக்குதலின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

இந்திய வரலாற்றில் எப்போதும் காணாத வகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 3 நாட்கள் நீடித்தது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய, 166 பேர் உயிரிழக்கக் காரணமான இந்த பயங்கரவாத தாக்குதல் நீங்கா வடுவாக இன்னும் இருக்கிறது. 

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர் ஈ தய்பா -வால் பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு மும்பையில் தாக்குதல் நடத்த 10 பேர் அனுப்பப்பட்டனர். பாகிஸ்தானின் கடலோர நகரமான கராச்சியில் இருந்து அதிவேக படகுகளில் அவர்கள்  இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பைக்கு வந்தனர். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பை நகருக்குள் நுழைந்தவுடனே அவர்கள் தாக்குதலைத் தொடங்கி விட்டனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், முக்கிய பிரமுகர்கள் தங்கும் தாஜ் ஓட்டல் மற்றும் ஓபராய் டிரைடன்ட் ஓட்டல், யூதர்கள் கூடும் நரிமன் இல்லம் உள்பட 10 இடங்களில் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஏகே 47 ரக துப்பாக்கிகளை வைத்திருந்த பயங்கரவாதிகள் 10 பேரும், கண்ணில் பட்ட அனைவரையும் சரமாரியாக சுட்டுத்தள்ளினர். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள், பாதுகாப்புப் படையினர் என்று வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் இந்த கண்மூடித் தாக்குதலுக்கு இலக்காயினர்.

பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான முயற்சியில் காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே தலைமையில் மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் களம் இறங்கினர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதல் சம்பவத்தின் போது மும்பையில் போர்க்கால அவசர சூழல் நிலவியது. பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 3 நாட்கள் வரை கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.

தாஜ் ஹோட்டல், நரிமன் இல்லம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 8 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் அஜ்மல் கசாபும், இஸ்மாயில் கான் என்ற மற்றொரு பயங்கரவாதியும் தாக்குதல் நடத்தினர். இதில் 58 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தாக்குதலில் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே உயிர் இழந்தார்.

மொத்தத்தில், பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த கசாப் உள்ளிட்ட 10 பயங்கரவாதிகளும் நிகழ்த்திய கண்மூடித்தனமான கொடூரத் தாக்குதலில் 166 பேர் உயிர் இழந்தனர்.

பாதுகாப்புப் படையினரின் எதிர் தாக்குதலில் இஸ்மாயில் கான் கொல்லப்பட்டார். அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டார். விசாரணையில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், 2012ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கசாப் தூக்கிலிடப்பட்டார்.

166 பேர் கொல்லப்பட்ட மும்பை தீவிரவாத தாக்குதலின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பை போலீஸ் ஜிம்கானா பகுதியில் உள்ள நினைவிடத்தில் மகாராஷ்ட்ர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com