“தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டுமென்றால் எடப்பாடி பழனிசாமி தான் தகுதியானவர்” - தம்பிதுரை எம்.பி

எடப்பாடி பழனிசாமி தலைமையில் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவது அதிமுகவின் குறிக்கோள் என்று அதிமுக எம்.பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறோம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி தான் தேர்தலை சந்திக்கும். 40 தொகுதிகளில் வெற்றி பெறுவது அதிமுகவின் குறிக்கோள்.

EPS
EPSகோப்புப்படம்

தமிழர் பிரதமராக ஆக வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்தை வரவேற்கிறோம், நன்றி தெரிவிக்கிறோம். அமித்ஷா, தான் தெரிவித்த வார்த்தையை செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமராக வர மாட்டார்களா என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. உலக அளவில் மாபெரும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் மோடி என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தம்பிதுரை
தம்பிதுரைகோப்புப்படம்

இந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் மோடி என சொல்லிவிட்டார். எனில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எப்போது பிரதமராக வருவர் என தெரியவில்லை. அப்படி வரும்பட்சத்தில் அதிமுக எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த எண்ணத்தை செயல்படுத்தக்கூடிய இடத்தில் தற்போது உள்ள எடப்பாடி பழனிசாமி தான் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும்.

எடப்பாடி பழனிசாமி எளிமையானவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். ஜெயலலிதா ஆசி பெற்றவர். ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு பிரதமர் ஆக அனைத்து தகுதிகளும் உள்ளது” என்றார்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com