குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளன: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளன: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளன: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பணிபுரியும் இடங்களில் குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை மையம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. இங்கு பயிற்சி பெறும் படை வீரர்கள் முக்கிய தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த ஆண்டு 1048 பேர் பயிற்சி நிறைவடைந்து பணிக்கு செல்கின்றனர். இதற்கான நிறைவு விழா இந்த மையத்தில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இந்த ஆண்டு 120 பெண் காவலர்கள் உட்பட 1048 பேர் பயிற்சியை நிறைவு செய்தனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயிற்சி முடித்தவர்களுக்கு பயிற்சி நிறைவு பதங்களை வழங்கினார். பயிற்சி முடித்த பெண் வீராங்கனைகள் சாகசங்கள் செய்து அசத்தினர். 

பின்னர் பேசிய ராஜ்நாத் சிங், இங்கு கடுமையான பயிற்சி மேற்கொண்டு நிறைவு செய்த எல்லாருக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது சவால் நிறைந்த பணி. தீவிரவாத அச்சுறுத்தல்களை சிஐஎஸ்எப் வீரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். உள்நாட்டில் நக்சலைட்டுகள், தீவிரவாத தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடிக்கின்றனர். இங்கு பயிற்சி முடித்த வீரர், வீராங்கனைகள் விமான நிலையங்கள், கப்பற்படை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், இந்திய எண்ணெய் நிறுவனங்கள், முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள் மற்றும் நாட்டில் உள்ள முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். சிஐஎஸ்எஃப் வீரர்கள் பணிபுரியும் இடத்தில் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளன. எல்லா துறையிலும் சிறந்து விளங்குகின்றனர். 


மேலும் அனைத்து துறை பாதுகாப்பு இடங்களிலும் தினமும் ஒரு கோடி மக்களை தொடர்பு கொள்கின்றனர். தீவிரவாத அச்சுறுத்தல்கள் வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை, தைரியம் எல்லா வீரருக்கும் அவசியம் தேவை. ஒரு நாட்டுக்கு பொருளாதார பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அரசுக்கு சொந்தமான பொருளாதாரம் குறித்த முக்கிய இடங்களில் இவர்கள் தங்கள் உயிரை துச்சம் என மதித்து துணிச்சலுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்த பயிற்சியை பார்த்து பெருமையடைகிறேன். இந்த மையத்தில் கடுமையான பயிற்சி அளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. வரும் காலங்களில் பயிற்சி மேற்கொள்பவர்களும், இதே போல கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பயிற்சி பெற்றவர்கள் நாட்டிற்காக பணியாற்றி தங்களை அர்ப்பணிக்க வேண்டும். சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும். 2030-க்குள் இந்தியா பொருளாதாரத்தில் உலகளவில் 3-வது இடத்தை அடையும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com