\
காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை !

காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை !

காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை !
Published on

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் ஷோபியன் மற்றும் பாம்பூரில் நடந்த இரண்டு மோதல்களில் எட்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதில், பாம்பூர் பகுதியில் நடந்த மோதலில் மசூதிக்குள் இருந்த இரு தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் வெளியேற்றினர். இந்த நடவடிக்கையில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தாமல் வெறும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை மட்டுமே பயன்படுத்தியதாக ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகள் இருப்பதைப் பற்றிய குறிப்பிட்ட தகவல்களைப் பெற்ற பின்னர் பாதுகாப்புப் படையினர் நேற்று காலை ஷோபியன் மற்றும் பாம்பூர் பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கினர். ஷோபியனில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், மூன்று பேர் பாம்பூரில் கொல்லப்பட்டனர். முன்னதாக புல்வாமா மாவட்டத்தில் பம்பூரில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். ஆனால் மேலும் இருவர் அருகிலுள்ள மசூதிக்குள் அடைக்கலம் புகுந்தனர் என அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் மசூதியில் அடைக்கலம் புகுந்த இரண்டு தீவிரவாதிகள் அங்கிருந்து வெளியேற்றப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை மட்டுமே பயன்படுத்தினர் எனக் காஷ்மீர் காவல் ஆய்வாளர் விஜய் குமார் தெரிவித்தார். இந்த நடவடிக்கையை ஜம்மு- காஷ்மீர் மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். இந்த நடவடிக்கை குறித்த தகவல்களை அம்மாநில காவல்துறையினர் ட்விட்டரிலும் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com