
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் ஸ்ரீசைலம் பகுதியில் சிவன் கோவில் அருகே உள்ள லலிதாம்பிகை என்ற கடையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. எல்.பிளாக் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பக்கத்து கடைகளுக்கு தீ மள மளவென பரவியது. இதனால் சுமார் 15-க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் கருகி நாசமாகின. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீசைலம் தேவஸ்தான கோயில் செயல் அலுவலர் லவண்ணா, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். இந்த சம்பவத்தில் சுமார் 2 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது.