12 மணி நேரத்தில் கொல்லப்பட்ட 2 அரசியல் கட்சி பிரமுகர்கள் - கேரளாவில் நிலவும் பதற்றம்
கேரளாவில் 12 மணிநேரத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த ஒருவரும், பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் நடந்த இந்த கொலையால் அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொலைகளுக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று மாலை எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் கே.எஸ்.ஷான் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த மர்ம கும்பல் அவரை குத்தி கொலை செய்துள்ளனர். பலத்த காயமடைந்தவர், கொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பாஜகவைச் சேர்ந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். 12 மணி நேரத்தில் இரண்டு அரசியல்கட்சி பிரமுகர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆலப்புழா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
''இத்தகைய கொடூரமான, மனிதாபிமானமற்ற செயல்பாடுகள் மாநிலத்துக்கு ஆபத்தானது. இதுபோன்ற கொலைகாரக் குழுக்களையும் அவர்களின் வெறுப்பு மனப்பான்மையையும் கண்டறிந்து தனிமைப்படுத்த அனைத்து மக்களும் தயாராக இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' என்று பினராயி விஜயன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக எஸ்டிபிஐயும், பாஜகவும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டியுள்ளனர்.
எஸ்டிபிஐ கட்சி தலைவர் எம்.கே.ஃபைசி ட்விட்டரில், "மாநிலத்தில் வகுப்புவாத வன்முறையை உருவாக்கி மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பது சங்பரிவார் அஜண்டாவின் ஒரு பகுதியாகும். ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தைக் கண்டிக்க வேண்டும். கேரள காவல்துறையின் அலட்சியப் போக்கு ஆர்.எஸ்.எஸ்-க்கு துப்பாக்கிச் சூடு போல் செயல்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், “கடந்த 60 நாட்களில் பாஜக தொண்டர்கள் மீதான மூன்றாவது கொடூர கொலை இது. மாநிலத்தை சீர்குலைக்க PFI குண்டர்கள் முயற்சி செய்கிறார்கள்”என்று தெரிவித்துள்ளார்.