இந்து மனைவிக்கு காளி கோயிலில் இறுதி மரியாதை: முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுப்பு!

இந்து மனைவிக்கு காளி கோயிலில் இறுதி மரியாதை: முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுப்பு!

இந்து மனைவிக்கு காளி கோயிலில் இறுதி மரியாதை: முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுப்பு!
Published on

மறைந்த இந்து மனைவியின் ஆசைப்படி காளி கோயிலில் பூஜை செய்ய, முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் இம்தியாஸூர் ரஹ்மான். மேற்கு வங்க வணிகவரித் துறையில் உதவி கமிஷனராக பணியாற்றுகிறார். இவர் மனைவி நிவேதிதா கடாக். 20 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இஹினி அம்ப்ரீன் என்ற மகள் உள்ளார். திருமணத்துக்குப் பிறகும் நிவேதிதா மதம் மாறாமல் இந்து மதத்தையே பின்பற்றி வந்துள்ளார். 

உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவரை, டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்திருந்தார் ரஹ்மான். உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் கடந்த வாரம் உயிரிழந்தார் அவர். இதையடுத்து டெல்லியில் இந்து முறைப்படி அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. ஆனால், இறந்தவர்களுக்கு செய்யப்படும் சடங்குகளை செய்ய வில்லை. 

இதையடுத்து டெல்லி சித்தரஞ்சன் பார்க்கில் உள்ள காளி கோயிலில், சிறப்பு பூஜைக்கு அனுமதி கேட்டிருந்தார். தனது மகளின் பெயரில் அனுமதி கேட்டிருந்த அவர், பூஜை கட்டணமாக 1,300 ரூபாயும் செலுத்தியிருந்தார். அருக்கு கடந்த 6-ம் தேதி அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அன்று மகளுடன் சென்ற அவரை கோயிலுக்குள் விடவில்லை. பெயரை கேட்டதும் பூஜைக்கான அனுமதியை ரத்து செய்துவிட்டனர்.

இதுபற்றி கோயில் சொசைட்டியின் தலைவர் அஷிதவா போவ்மிக் கூறும்போது, ‘ரஹ்மான் தனது அடையாளத்தை மறுத்து மகளின் பெயரில் அனுமதி கேட்டிருந்தார். அந்த பெயர் முஸ்லிம் பெயராகத் தெரியவில்லை. அதனால் அனுமதி கொடுத்தோம். அவரது குலம், கோத்ரம் பற்றி கேட்டபோது, அவரால் பதில் சொல்ல முடியவில்லை. முஸ்லீம்கள் குலம், கோத்ரம் பின்பற்றுவதில்லை. அதோடு, அந்தப் பெண் எப்போது முஸ்லீமை திருமணம் செய்துகொண்டாரோ, அப்போதே அவர் இந்து மதத்தில் இருந்து விலகிச் சென்று விட்டார்’ என்றார்.

அவரிடம் இந்து பெண்ணின் கடைசி ஆசையை நிறைவேற்றத்தானே அனுமதி கேட்கிறார் என்று கேட்டபோது, ‘அவர் 50-100 உறவினர்களுடன் கோயிலுக்குள் சென்று நமாஸ் செய்யத் தொடங்கிவிட்டால் என்ன செய்வது? அப்படி செய்தால் நாம் என்ன செய்ய முடியும்?’ என்றார். அதோடு, ’மேற்கு வங்கத்தில் உள்ள அவரது வீட்டிலேயே இந்த பூஜையை செய்யலாமே, டெல்லிக்கு ஏன் வரவேண்டும்?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

’மனைவியின் ஆசைப்படி அந்த பூஜையை செய்ய நினைத்தேன். ஆனால் நான் அனுமதிக்கப்படவில்லை’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார் ரஹ்மான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com