
தெலங்கானா மாநிலம் போரபண்டாவைச் சேர்ந்தவர் முகமது சோயப். இவர், அங்குள்ள பகுதியில் பேக்கரியில் வேலை செய்து வந்தார். 19 வயது இளைஞரான இவருக்கும் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அவருடைய காதலி, முகமது சோயப்பிடம், ’தனக்கு ஒரு பீட்சா கொண்டு வர முடியுமா’ எனக் கேட்டுள்ளார். காதலியின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம், சோயப்பும் கடந்த 6ஆம் தேதி இரவு பீட்சா ஒன்றை எடுத்துக் கொண்டு அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அன்றைய தினம் காதலியின் வீடான, 4வது மாடியில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது, காதலியின் தந்தை வந்ததால், பயத்தில் 4வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், முகமது சோயப் பலத்த காயம் அடைந்தார். பின்னர், காயமடைந்த அவர் அருகில் இருந்த உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முகமது சோயப் உயிரிழந்தார். இது தொடர்பாக முகமது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்ததை அடுத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தர்மபுரியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவரான ஒருவர், இதேபோல் தன் காதலியிடம் அடுக்குமாடி மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது காதலியின் தாயைக் கண்டு பயந்து கட்டடத்திலிருந்து குதித்ததில் உயிரிழந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.