
ஹைதராபாத்தில் உள்ள நம்பள்ளியில் 4 மாடிகள் கொண்ட குடியிருப்பின் தரைத்தளத்தில் உள்ள ரசாயன கிடங்கில் திடீரென தீப்பற்றியது. ரசாயன பொருட்களில் தீப்பற்றியதால் அடுத்த சில நிமிடங்களில், 4 மாடிகளில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியதால் பதற்றமான சூழல் நிலவியது.
தரைத்தளத்தில் ரசாயன கிடங்கில் இருந்த டீசல் பேரல்கள் வெடித்துச் சிதறியதால் மீட்பு பணிகள், தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தீயணைப்புத் துறையினருக்கு சவால் நிறைந்ததாக இருந்தது. நீண்டநேரத்துக்குப் பிறகு ஜன்னல் வழியாக புகுந்த தீயணைப்புத் துறையினர் 6 பேரின் உடல்களை மீட்டனர். மேலும் குழந்தைகள் உள்ளிட்டவர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டுவந்தனர்.
எனினும் 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மூன்று பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரின் நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.