தெலங்கானா: தேர்வெழுத தாமதமாக சென்ற மாணவன் - அனுமதிக்க மறுத்ததால் விபரீத முடிவு
செய்தியாளர் - தினேஷ்
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் மங்குருலா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். தெலங்கானாவில் இன்று 11ஆம் வகுப்பு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 9 மணிக்கு தேர்வு துவங்கிய நிலையில் மாணவன் சிவக்குமார் ஒரு நிமிடம் தாமதமாக பள்ளிக்கு தேர்வெழுதச் சென்றுள்ளார்.
அப்போது தாமதமாக வந்ததாகக் கூறி அவரை தேர்வெழுத அனுமதிக்க மறுத்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்து சென்ற மாணவன் சிவக்குமார் தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி ஏரிக்கரையில் வைத்து விட்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து குளிப்பதற்காக அங்கு சென்றவர்கள் தற்கொலை கடிதத்தை பார்த்து சிவகுமாரின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்நிலையில், கிராம மக்கள் விரைந்து சென்று உடலை மீட்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சிவக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

