
தெலங்கானாவை சேர்ந்தவர் கவிஞரும், பாடகருமான கும்மாடி வித்தல் ராவ். இவர் கத்தார் என்ற பெயர் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்த கத்தார், ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்தச் சூழலில் அவர் இன்று காலமானார். அவரது மறைவுக்குப் பிரபல தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கானா காங்கிரஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "கத்தார் என்ற ஸ்ரீகும்மாடி விட்டல் ராவின் அகால மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர், ஒரு சிறந்த கவிஞர், ஒரு புரட்சிகர வீரர். அவரது குரல் தெலுங்கானாவின் ஆன்மாவை எதிரொலித்தது. அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்” எனப் பதிவிட்டுள்ளது.
ட்விட்டரில் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள், “நாங்கள் உண்மையிலேயே மிஸ் செய்கிறோம்” என உருக்கமாக பதிவிட்டு வருகிறார்கள்.
“புரட்சிகர மக்கள் பாடகர், தெலுங்கானா போராளி கதர் அண்ணா மறைந்தார் என்ற செய்தி மிகவும் வருத்தமாக உள்ளது” என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
1946ஆம் ஆண்டு தெலுங்கானாவில் பிறந்த கத்தார், நக்சலைட்டுகளின் ஓர் அமைப்பில் நிறுவனராக இருந்தார். கவிஞரான அவர், புரட்சிகர பாடல்களை எழுதி, இசையமைத்து மேடைகளில் பாடினார். அவரது பாடல்கள் பல இளைஞர்களை மாவோயிசத்திற்கு அழைத்துச் செல்ல தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.