தெலங்கானா | ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் முடித்த வாலிபர்.. #Viralvideo
தெலங்கானாவின் கோமரம் பீம் ஆசிபாபாத் மாவட்டம் லிங்கபூர் மண்டலத்தில் உள்ள கும்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யதேவ். இவர், லால் தேவி மற்றும் ஜல்காரி தேவி ஆகிய இரண்டு பெண்களையும் காதலித்துள்ளார். அத்துடன், இருவரையும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி சூர்யதேவ், இரு மணப்பெண்களின் பெயர்களையும் ஒரே திருமண அழைப்பிதழில் அச்சிட்டு ஒரு பிரமாண்டமான கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தார். அந்த வகையில், இவர்களுடைய திருமணம் பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. அதில் அந்த இரண்டு பெண்களும் சூர்யதேவின் கையைப் பிடித்தபடி உள்ளனர். தவிர, அத்திருமணத்தில் அந்த மூவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் கிராமத்தினரும் உள்ளனர்.
இந்தியாவில் இந்துக்கள் பலதார மணம் செய்வது சட்டவிரோதமானது. எனினும், இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. 2021ஆம் ஆண்டில், இதே தெலங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தில் மற்றொரு ஆண், ஒரே மண்டபத்தில் இரண்டு பெண்களை மணந்தார். உட்னூர் மண்டலத்தில் நடந்த இந்த விழா, மூன்று குடும்பங்களின் சம்மதத்துடன் நடந்ததாக தகவல்கள் தெரிவித்தன. அதேபோல், 2022ஆம் ஆண்டில், ஜார்கண்டின் லோஹர்தாகாவில் ஒரு நபர் தனது இரண்டு தோழிகளையும் மணந்துகொண்டார். அதேபோல் சத்தீஸ்கரிலும் ஒரு சம்பவம் நடைபெற்றது.