
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திற்கு உட்பட்ட டல்லாஸ் நகரில் இருக்கும் ஆலன் பிரீமியம் அவுட்லெட்ஸ் மாலில் கடந்த சனிக்கிழமை அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் அங்கு ஷாப்பிங் செய்து கொண்டிருந்த பொதுமக்களை நோக்கி அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதையறிந்த மாலில் இருந்த பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து ஆயுதம் ஏந்தியிருந்த அந்த நபரைச் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இந்த மோசமான சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதில் சிகிச்சைக்குப் பிறகு 2 பேர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்த சம்பவத்தில் இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா தடிகொண்டா என்ற 27 வயது பெண்ணும் உயிரிழந்துள்ளார். தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் மகளான ஐஸ்வர்யா, ஹைதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளார். பிறகு 2020-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கிழக்கு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் கட்டுமான நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் அமெரிக்க பணி விசாவில் டல்லாஸை தளமாகக் கொண்ட ஒப்பந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில்தான், ஐஸ்வர்யா சனிக்கிழமை தன் நண்பருடன் ஆலன் மாலுக்கு சென்றபோது அங்கு எதிர்பாராதவிதமாக நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். வட அமெரிக்காவில் உள்ள தெலுங்கு சங்கத்தின் உதவியுடன் அவரது உடலை இந்தியா கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. “ ஐஸ்வர்யா இறந்த விஷயம் ஞாயிற்றுக்கிழமைதான் எங்களுக்குத் தெரியும். துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு முன்னர் எப்போதும் போல அவர் தன் குடும்பத்தினருடன் போனில் பேசியுள்ளார். அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.
துப்பாக்கிச்சூடு பற்றி செய்திகளில் அறிந்த பின்னர் அவரது குடும்பத்தினர் ஐஸ்வர்யாவை போனில் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை பிறகுதான் அவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துவிட்டார் என்ற தகவல் தெரியவந்தது. தன் மகளின் எதிர்பாராத இறப்பால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஐஸ்வர்யாவின் உடலை விரைவில் இந்தியா கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என ஐஸ்வர்யா தந்தையின் நண்பர் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா அரசும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் ஐஸ்வர்யாவின் உடலை இந்தியா கொண்டு வருவதற்காகத் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐஸ்வர்யாவின் இறப்பு பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவரது நண்பர் சாய் விகாஸ், ‘துப்பாக்கி ஏந்திய நபர் ஐஸ்வர்யாவின் முகத்தில் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதனால் அவரை அடையாளம் காண்பதே மிகவும் சிரமமாக இருந்தது. அவரது கைவிரல் ரேகையை வைத்துத்தான் காவலர்கள் இறந்தது ஐஸ்வர்யாதான் என்பதை உறுதி செய்தனர்.
அவள் முகத்தில் குண்டுகள் பாய்ந்தபோது அவர் எப்படி அவதிப்பட்டிருப்பார் என்பதை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது. ஐஸ்வர்யா அனுபவத்த வலியை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. மாலில் அத்தனை பாதுகாப்புப் பணியாளர்கள் இருந்தும் துப்பாக்கியுடன் அந்த நபர் எப்படி அனுமதிக்கப்பட்டார்?” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் விரைவில் ஐஸ்வர்யாவின் உடலை இந்தியா எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கத் தூதரகத்துக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். துப்பாக்கி வன்முறை காப்பகத்தின் படி, 2023ல் அமெரிக்காவில் இதுவரை குறைந்தது 198 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.