"எம்.பி நிதியில் சொந்த வீடு கட்டினேன், மகனுக்குக் கல்யாணம் செய்தேன்”.. பாஜக எம்பியின் பகீர் பேச்சு!

எம்.பிக்கள் நிதியை சொந்த செலவுகளுக்கு பயன்படுத்த முடியுமா என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.
சோயம்பாபு ராவ்
சோயம்பாபு ராவ்கோப்புப்படம்
“எனக்கு இந்தத் தொகுதியில் வீடு இல்லை. அதனால் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி வீடு கட்டிக் கொண்டேன். எனது மகனின் திருமணத்தை கூட தொகுதி மேம்பாட்டு நிதியை வைத்துதான் நடத்தினேன். வேறு எந்த தலைவர்களும் என்னை போல இதை தைரியமாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள்”

என பாஜக எம்.பி ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. எம்.பிக்கள் நிதியைப் பயன்படுத்த பல்வேறு வழிமுறைகள் உள்ள நிலையில், இப்படி சொந்த செலவுகளுக்கு பயன்படுத்த முடியுமா என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

சோயம்பாபு ராவ்
சோயம்பாபு ராவ்

தெலங்கானா மாநிலம் அடிலாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியானவர் சோயம்பாபு ராவ். ஆரம்பகாலத்தில் தெலுங்குதேசம் கட்சியில் பயணித்த இவர், 2004 சட்டமன்றத் தேர்தலில் போத் தொகுதியில் வெற்றிபெற்றி எம்.எல்.ஏவாகவும் இருந்திருக்கிறார். தெலங்கானா மாநில உருவாக்கத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்து,2018-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதே போத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருக்கிறார். தொடர்ந்து, பாஜகவில் இணைந்தவர், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அடிலாபாத் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக இருக்கிறார்.

இந்தநிலையில், கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்ந்துகொண்ட சோயம் பாபு ராவ் மேற்கண்ட கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். தொகுதி மேம்பாட்டுக்காக ஒவ்வொரு எம்.பிக்கும் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் நிதியாக ஒதுக்கப்படுகிறது. 1993 டிசம்பரில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஒரு எம்.பி.க்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டது. 1998 – 99-ல் 2 கோடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து, 2011 -ல் இருந்து 5 கோடி ஒதுக்கபப்டுகிறது. எம்.பி நிதியைப் பயன்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. இந்தநிலையில், ஒரு எம்.பி ஒருவர் இப்படி பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை உண்டாக்கியிருக்கிறது.

மாணிக் தாகூர்
மாணிக் தாகூர்

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூரிடம் பேசினோம்..,

``எம்.பியாக இருப்பவர் எந்தெந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கமுடியும் என பல வழிமுறைகள் இருக்கின்றன. அதற்காக தனியாக ஒரு புக்லெட்டே இருக்கிறது. தனது குடும்பத்தினர் நிர்வகிக்கும் என்.ஜி.ஓக்களுக்கோ, அறக்கட்டளைகளுக்குக்கூட எம்.பி நிதியில் இருந்து நன்கொடை கொடுக்க முடியாது. சோயம் பாபு ராவின் கருத்து எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை அளிக்கிறது. தொகுதி மேம்பாட்டு நிதியை எம்.பிக்கள் நேரடியாகச் செலவு செய்யமுடியாது. ஒரு பணிக்கு எவ்வளவு எஸ்டிமேட் என மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதவேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் அதற்கு ஒரு எஸ்டிமேட் தயார் செய்து டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படும். இடம் உள்ளிட்ட விஷயங்கள் வருவாய்த்துறையினர் முடிவு செய்வார்கள். அதற்குப்பிறகு அதற்கு ஒரு சர்டிபிகேட் கொடுத்த பிறகுதான் பணம் ரிலீஸாகும். பா.ஜ.க எம்பி மட்டும் எப்படி இப்படியான வேலைகளைச் செய்கிறார் எனத் தெரியவில்லை. ரூம் போட்டு யோசிப்பார்களோ என நினைக்கத் தோன்றுகிறது’’

இதுகுறித்து, பாஜக மூத்த தலைவர் ஹெச்.வி ஹண்டேவிடம் பேசினோம்,

``அவர் கூறிய கருத்துக்கள் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற விஷயங்களை யார் செய்திருந்தாலும் தவறுதான்’’ என்றார்.

ஆனால், சோயம் பாபு ராவ் இதுகுறித்து ஊடகங்களிடம் பேசியபோது ``நான் பிஸியாக இருந்ததால் அந்த வீடியோவை இன்னும் பார்க்கவில்லை. அதைப் பார்த்தால்தான் என்னால் அது குறித்து கருத்துச் சொல்ல முடியும். மேலும், அந்த வீடியோ யாரோ சிலரால் திரிக்கப்பட்டதாக இருக்கலாம். குறிப்பாக அது கட்சித் தொண்டர்களுடனான என்னுடைய தனிப்பட்ட சந்திப்பு" என்று கூறியிருக்கிறார்.

ஹெச்.வி ஹண்டே
ஹெச்.வி ஹண்டே

ஏற்கெனவே, ஐந்துகோடியாக இருக்கும் எம்.பி தொகுதியே போதவில்லை கூடுதலாக நிதி ஒதுக்கவேண்டும் என காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏ தொகுதிக்கு 3 கோடி ரூபாய் ஒதுக்குவதைப்போல, சராசரியாக ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய எம்.பி தொகுதிக்கு 20 கோடி ரூபாயாவது ஒதுக்கவேண்டும் என்பதே எம்.பிக்கள் பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தவிர, தற்போது எம்.பி-க்களுக்கு ஒதுக்கப்படும் 5 கோடி ரூபாயில், 18 சதவிகிதம் அதாவது, சுமார் ஒரு கோடி ரூபாய் ஜி.எஸ்.டி-க்கே போய் விடுகிறது என்பது கம்யூனிஸ்ட் கட்சி எம்பிக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. மறுபுறம், எம்.பிக்கள் தங்களக்கு ஒதுக்கபப்டும் நிதியை சரியாகப் பயன்படுத்துவதில்லை என புகார்களும் எழாமல் இல்லை. ஆனால், எம்பி ஒருவர் தொகுதி மேம்பாட்டுக்கான நிதியை தன் சொந்த விஷயங்களுக்குப் பயன்படுத்தியிருப்பதாகக் கூறியிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. எம்.பியின் பேச்சை சாதாரணமாகக் கடந்துசெல்லாமல், முறையாக விசாரிக்கவேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்கள், சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com