“என்கவுன்ட்டர் நடந்துள்ளதால் என் மகளின் ஆத்மா சாந்தியடையும்”- பெண் மருத்துவரின் தந்தை..!
கைது செய்யப்பட்ட 4 பேரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளதால், தமது மகளின் ஆத்மா சாந்தியடையும் எனக் கொல்லப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 27-ஆம் தேதி தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் அடிப்படையில் அவர்கள் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, எப்படி கொலை செய்தனர் என போலீஸார் செய்து காட்டச் சொல்லியுள்ளனர். அப்போது 4 பேரும் தப்பித்து ஓட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. மருத்துவரை எரித்துக்கொன்ற இடத்திலேயே இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளதால், தமது மகளின் ஆத்மா சாந்தியடையும் எனக் கொல்லப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ எனது மகள் உயிரிழந்து 10 நாட்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில் என்கவுன்டர் நிகழ்ந்துள்ளது. காவல்துறை, தெலங்கானா அரசு உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் மகளின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும்.” என்றார்.
கொல்லப்பட்ட பெண்ணின் சகோதரி கூறும்போது,“ நீதி வழங்கப்பட்டிருக்கிறது. தெலங்கானா காவல்துறை, அரசு, எங்களுடன் இருந்தவர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும்” என தெரிவித்தார்.