”நாங்கள் ஆட்சி அமைத்தால் பிகாரில் கள்ளுக்கு அனுமதி” - தேஜஸ்வி கொடுத்த தேர்தல் வாக்குறுதி! | Bihar
பிகார் சட்டப்பேரவையின் முதல்கட்ட தேர்தல் நவம்பர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிகார் மாநிலத்தில் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. பிகாரில் அரசியல் கட்சிகள் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், பிகார் மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. அதன்படி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் மாகா கட்பந்தன் கூட்டணி முதல்வர் வேட்பாளராகவும் உள்ள தேஜஸ்வி யாதவ் இன்று, சரண் மாவட்டத்தின் பர்சா பகுதியில் நடந்த பரப்புரையில் கலந்து கொண்டு பேசும்போது பனையிலிருந்து தயாரிக்கப்படும் பாரம்பரிய பானமான கள்ளு பிகார் மது விலக்கு சட்டத்தில் இருந்து விளக்களிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பிகார் முதலமைச்சராக இருப்பவருமான நிதிஷ் குமார் கடந்த, 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாநிலம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தினார். அதுவும், சட்டமன்றத்தில் ஒவ்வொரு எம்.எல்.ஏவும் இன்று முதல் மது அருந்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றபின் அதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மதுவிலக்கு அமலுக்கு வந்தது. பார் லைசன்ஸ்கள் முதற்கொண்டு ரத்து செய்யப்பட்டதால், பெண்கள் மத்தியில் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு பெருமளவிலான வரவேற்பு கிடைத்தது.
ஆனால், பொதுவெளியில் கள்ளச் சந்தைகளில் விற்கப்படும் சாராயங்களால் நிகழ்ந்த மரணங்கள் பூரண மதுவிலக்கு அவசியமா என்ற உரையாடலை மீண்டும் மீண்டும் பிகாரில் ஏற்படுத்தின. மதுவிலக்கு காரணமாக ஒவ்வொரு வருடமும் மாநிலத்தில் பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருட்களின் அளவு அதிகரித்துக்கொண்டே இருந்தது. உதாரணத்திற்கு, 2015ல் அதாவது மதுவிலக்கு அமலுக்கு வருவதற்கு முன் 14 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது என்றால், 2016 ஆம் ஆண்டு அது 10,800 கிலோவாக அதிகரித்தது. 2021 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் 27,365 கிலோ. கிட்டத்தட்ட போதைப்பொருள் பறிமுதல் மட்டும் 2700% அதிகரித்திருக்கிறது. இவ்வாறு மதுவை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டு வந்திருந்தாலும், முறைகேடான பல வழிகளுக்கு இழுத்துச் சென்றுள்ளது
இந்நிலையில் தான், ராஷ்டிரிய ஜனதா கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசும்போது, “ பிகாரில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, கடத்தல் ஆகியவற்றை பார்க்க முடிகிறது. ஆனால், முதல்வர் நிதிஷ் குமார் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற அவர் ஒருபோதும் வருவதில்லை. இது அரசாங்கத்தின் வெளிப்படையான உணர்வின்மையைக் காட்டுகிறது” எனக் கூறிய அவர், மாகா கட் பந்தன் கூட்டணி ஆட்சி பிகாரில் அமைந்தால் பிகார் மதுவிலக்குக் கொள்கையில், பனையிலிருந்து இறக்கப்படும் கள்ளுக்கு விலக்களிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

