ஓவைசியை சமாளிக்க தேஜஸ்வி... மேற்கு வங்க அரசியலில் மம்தாவின் புதிய 'நகர்வு'!
புதிய கூட்டணிக்கு அச்சாரம் போடும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி - ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். இருகட்சிகளுமே பாஜக எதிர்ப்பு மனநிலையில் இருப்பதால், கூட்டணிக்கு சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருப்பதாகப் பேசப்படுகிறது.
வரவிருக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணி மேற்கொள்ள இருப்பதாக வெளியான யூகங்களுக்கு மத்தியில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜாஷ்வி யாதவ் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியிருக்கிறார்.
மேற்கு வங்க தலைமைச் செயலகமான நபன்னாவுக்குச் சென்று மம்தா பானர்ஜியைச் சந்தித்தார் தேஜஸ்வி. திரிணாமுல் மூத்த தலைவரும், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சருமான ஃபிர்ஹாத் ஹக்கீமும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார். இருவரும் சந்திக்கும் முன்னரே இருகட்சிகளும் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பாஜகவை எதிர்ப்பது என்ற அடிப்படையில் இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்திவந்தன.
கடந்த மாதம் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர்களான அப்துல் பாரி சித்திகி மற்றும் ஷியாம் ராஜக் ஆகியோர், மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில்தான் இரு கட்சித் தலைவர்களும் இன்று சந்திப்பு நடத்தியுள்ளனர்.
ஒருவேளை இரு கட்சிகளும் கூட்டணி உறுதியாகும் பட்சத்தில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்க - பீகார் எல்லையில் சில இடங்களுக்கு போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றன. இதற்கு முன்பு 2006 மேற்கு வங்க தேர்தலிலேயே ராஷ்ட்ரிய ஜனதா தளம் போட்டியிட்டு, ஒரு எம்எல்ஏவை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ், ``எங்கள் கட்சியின் நிலைப்பாடு மம்தாஜிக்கு முழு ஆதரவை வழங்குவதாகும். பீகாரில் இருந்து மேற்கு வங்கத்தில் குடியேறிய மக்கள் மம்தா பானர்ஜியின் கட்சிக்கு துணை நிற்க வேண்டும்" என்றார்.
ஓவைசியை சமாளிக்க தேஜஸ்வி யாதவ்?
மேற்கு வங்கத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சி இந்த முறை போட்டியிடும் என்று ஏற்கெனவே அதன் தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார். பாஜக குடைச்சலுக்கு மத்தியில் மேற்கு வங்கத்தில் அசாதுதீன் ஓவைசியின் எழுச்சி மம்தா பானர்ஜியின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. இதனால்தான் ஓவைசியை சமாளிக்க தேஜஸ்வி யாதவை மம்தா கூட்டணியில் இணைக்க போகிறார் எனக் கூறப்படுகிறது.
இதற்குக் காரணம், மேற்கு வங்கத்தில் சிறுபான்மை மக்கள் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டங்களான வடக்கு தினாஜ்பூர் மற்றும் மால்டா ஆகியவை பீகாரின் முஸ்லிம் ஆதிக்கம் கொண்ட சீமஞ்சல் பிராந்தியத்தை ஒட்டி இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த சீமஞ்சல் பிராந்தியத்தில் ஓவைசியின் கட்சி அதிக எழுச்சி கண்டது. இரு மாநில எல்லை மாவட்டங்களிலும் ஓவைசி தனிப்பெரும் கட்சியாக கவனிக்கத்தக்க வளர்ச்சியை கண்டது. குறிப்பாக, இந்தப் பகுதியில் இருந்துதான் ஐந்து தொகுதிகளை ஓவைசி கட்சி கைப்பற்றியது.
சிறுபான்மை மக்களையும் தாண்டி, பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் வசிக்கும் இரு மாநில எல்லையான இந்தப் பகுதியில் ஓவைசியை போலவே தேஜஸ்வி யாதவும் பேசப்படும் நபராக இருக்கிறார். இதனால்தான் இரு மாநில எல்லையை ஒட்டிய மாவட்டங்களான வடக்கு தினாஜ்பூர், மால்டா மற்றும் முர்ஷிதாபாத் ஆகிய இடங்களில் ஓவைசியை சமாளிக்க தேஜஸ்வி யாதவை மம்தா களமிறக்கவுள்ளார். இதே பகுதிகளில் உள்ள தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதாக ஓவைசி ஏற்கெனவே அறிவித்து இருக்கிறார். வடக்கு தினாஜ்பூரில் 9 சட்டப்பேரவை இடங்கள், மால்டாவில் 12 தொகுதிகள், முர்ஷிதாபாத்தில் 22 இடங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- மலையரசு