"இன்ஸ்டா நண்பரை பார்க்க பாகிஸ்தான் போறேன்”-டிக்கெட் கேட்ட சிறுமி.. ஜெய்ப்பூர் ஏர்போர்ட்டில் பரபரப்பு

லாகூரைச் சேர்ந்த சிறுவனைச் சந்திக்க பாகிஸ்தானுக்குச் செல்ல முயன்ற 16 வயது சிறுமி ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை பிடிப்பட்டார். இது காவல்துறை மற்றும் உளவுத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் நட்பு
இன்ஸ்டாகிராம் நட்புPT

இன்ஸ்டாகிராம் நண்பரை சந்திக்க பாகிஸ்தானுக்கு செல்ல முயன்ற சிறுமி ஜெய்பூர் விமான நிலையத்தில் பிடிபட்டார்.

ஜெய்ப்பூர்: லாகூரில் வசித்து வரும் தனது ஆண் நண்பரை சந்திக்க, பாகிஸ்தானுக்குச் செல்ல முயன்ற 16 வயது சிறுமி ஜெய்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை மதியம் காவல் துறை மற்றும் உளவுதுறையினரால் சந்தேகத்தின் அடிப்படையில் பிடிபட்டார்.

இது குறித்த விவரம் வருமாறு:

ஒரு சிறுமி தனியாக ஜெய்ப்பூர் விமான நிலயத்தில் லாகூருக்கு விமான டிக்கெட் வாங்க முற்பட்டது அங்கிருந்த இருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் ஆச்சர்யப்பட வைத்தது. சந்தேகத்தின் அடிப்படையில் பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் விசாரித்த பொழுது அச்சிறுமியிடம் பாஸ்போர்ட், விசா போன்ற எந்த ஆவணமும் இல்லை என்று தெரியவந்தது. இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விமான நிலைய போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

போலிசாரின் விசாரணையில் அப்பெண், தனது பெயர் “கசல் முகமது” என்றும், லாகூரை சேர்ந்தவர் என்றும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு லாகூரிலிருந்து தனது அத்தையுடன் ஜெய்பூருக்கு அருகில் உள்ள சிக்கர் கிராமத்திற்கு வந்ததாகவும், ஆனால் இங்கு வந்த பிறகு அத்தை அவர்களது உறவினரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால், அத்தையிடமிருந்து தப்பிக்க இரு சிறுவர்களின் உதவியுடன் சிகாரிலிருந்து பேருந்தில் ஜெய்பூர் வந்ததாகவும், இங்கிருக்க விருப்பமில்லாததால் திரும்ப பாகிஸ்தான் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.

இது குறித்து உடனடியாக ஜெய்ப்பூர் போலீசார் மாநில உளவுத்துறைக்கு தகவல் தந்தனர். உடனடியாக, சிகார் காவல்துறையும் உள்ளூர் புலனாய்வுப் பிரிவினரும் சிறுமியின் அத்தையைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இறங்கினர். ஆனால் சிறுமி குறிப்பிட்ட கிராமத்தில் “கசல் முகமது” என்ற பெயரில் யாரும் இல்லை என்று விசாரணையில் தெரியவந்தது.

மீண்டும் போலீசார் அச் சிறுமியிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அதில் அச்சிறுமி, “தான் பெயர் ‘கசல்முகமது’ அல்ல என்றும், தான் ஜெய்பூருக்கு அருகில் உள்ள சோமு பகுதியைச்சேர்ந்தவர் என்றும், இன்ஸ்டாகிராமில் பாகிஸ்தான் லாகூரைச் சேர்ந்த ‘அஸ்லம்’ என்ற இளைஞருடன் பழகி வந்ததாகவும், அவர் அழைத்ததின் பெயரில் தனது பெயரை ‘கசல்முகமது’ என்று மாற்றிக்கொண்டு லாகூருக்கு டிக்கெட் வாங்க வந்ததாக கூறினார்.

இந்த பெண்ணின் இன்ஸ்டாகிராமை சோதனையிட்ட பொழுது, இந்த பெண்ணும் லாகூரை சேர்ந்த அஸ்லமும் கடந்த ஒருவருட காலமாக தொடர்பில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த சிறுமியின் தோழிகளுடனும் அஸ்லம் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமி சோமு பகுதியிலிருந்து ஜெய்ப்பூர் வர உதவி செய்த இரண்டு சிறுவர்கள் யார் என்பது குறித்தும் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஞ்சு என்ற பெண் தனது காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சம்பவம் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், தற்பொழுது இந்த சிறுமி பாகிஸ்தான் செல்ல முயன்றது போலிசாரை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com