வாங்காத கடனுக்கு ரூ.50 கோடி செலுத்தச் சொன்ன வங்கி: அதிர்ச்சியடைந்த டீக்கடைக்காரர்!
ஹரியானா மாநிலம், குருக்ஷேத்ரா பகுதியில் சாலையோரமாக சிறிய அளவில் டீக்கடை நடத்தி வருபவர் ராஜ்குமார். கொரோனா ஊரடங்கு காரணமாக அவரது வருமானம் கடுமையாக குறைந்துள்ளது. இதன் காரணமாக வங்கி ஒன்றில் கடன் கேட்டு ராஜ்குமார் விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் இவரது விண்ணப்பத்தை நிராகரித்த வங்கி நிர்வாகம், அதோடு நில்லாமல் அவருக்கு ஷாக்கிங் தரும் வகையில் ஒரு நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பி வைத்தது.
அதில், ராஜ்குமார் ஏற்கனவே வாங்கிய ரூ.50 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் புதிதாகக் கடன் வழங்க முடியாது என்றும் வங்கி தரப்பில் ‘கறாராக’ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நோட்டீசை பெற்றுக்கொண்ட ராஜ்குமார் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. ரோட்டோரமாக ஒரு சிறிய டீக்கடை வைத்திருக்கும் என்னை நம்பி எப்படி 50 கோடி கடன் கொடுக்க முடியும். தனது பெயரில் வேறு யாரோ கடன் வாங்கியிருப்பதாகவும், தான் எந்த கடனையும் வாங்கவில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார் ராஜ்குமார்.