தெலுங்கு தேசம் எம்எல்ஏ கைது ! - ஆந்திராவில் பதற்றம்
ஆந்திராவில் தெலுங்கு தேசம் சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் நடத்தினர். முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ-க்கள் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதால் ஆந்திராவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தில் ரூ. 151 கோடி ஊழல் செய்ததாகத் தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவும், அக்கட்சியின் முன்னாள் அமைச்சருமான அச்சன் நாயுடுவை ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். 2014-19 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் அச்சன் நாயுடு. இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மருந்து வாங்குவதில் ரூ.151 கோடி ஊழல் ஏற்பட்டதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் அச்சன் நாயுடுவின் ஸ்ரீகாகுளம் வீட்டில் சோதனை நடத்தி அவரைக் கைது செய்தனர்.
அதே போல, இஎஸ்ஐ-யின் முன்னாள் இயக்குநர் ரமேஷ் குமார், இணை இயக்குநர் ரவிக்குமார், அலுவலக நிதியாளர் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில், இது அரசியல் பழி வாங்கும் செயல் எனத் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இதனையடுத்து, ஆந்திரா முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்எல்ஏ என ஏராளமான தெலுங்கு தேசம் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.