ரூ.100க்கு புற்றுநோய் தடுப்பு மாத்திரை.. டாடா ஆராய்ச்சி நிறுவனம் சாதனை!

இரண்டாவது முறையாக புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கும் வகையில், ரூ.100 விலையில் மாத்திரையை, மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிட்யூட் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்து உள்ளது.
model image
model imagetwitter

இரண்டாவது முறையாக புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கும் வகையில், ரூ.100 விலையில் மாத்திரையை, மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிட்யூட் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்து உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த டாடா இன்ஸ்டிட்யூட் நிறுவனம், தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இந்த மாத்திரை, நோயாளிகளுக்கு இரண்டாவது முறையாக புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும் என்றும், அத்துடன் கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி போன்ற சிகிச்சையின் பக்கவிளைவுகளை 50 சதவீதம் குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் கணையம், நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் ஆகியவற்றிற்கும் இந்த மாத்திரை பயன் உள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த மாத்திரை, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. ஒப்புதல் கிடைத்த பிறகு, வரும் ஜூன் – ஜூலை மாதங்களில் சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் ஒப்புதலுக்குப் பிறகு விற்பனைக்கு வரும்.

மாத்திரை தொடர்பாக டாடா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ’புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த இந்த மாத்திரை பெரிதும் உதவும். எல்லா மருந்துக் கடைகளிலும் இந்த மாத்திரை கிடைக்கும். இது மிகப்பெரிய வெற்றி’ என அதில் கூறப்பட்டு உள்ளது. மேலும் இதன் விலை ரூ.100க்குள் இருக்கலாம் என அதன் ஆராய்ச்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆராய்ச்சி குழுவில் இடம்பெற்றிருந்த டாடா மெமோரியல் மருத்துவமனையின் மூத்த புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேந்திர பத்வே, “எலிகளில் மனித புற்றுநோய் செல்கள் புகுத்தப்பட்டு, புற்றுநோய் கட்டி உருவாக்கப்பட்டது. கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த புற்றுநோய் செல்கள் இறக்கும்போது, அவை குரோமாடின் துகள்கள் எனப்படும் சிறிய துண்டுகளாக உடைந்து, ரத்த ஓட்டத்தின் மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்குச் சென்று ஆரோக்கியமான செல்களுக்குள் செல்ல முடியும். குரோமாடின் துகள்கள் ஆரோக்கியமான குரோமோசோம்களுடன் இணைந்து புதிய கட்டிகளை ஏற்படுத்தலாம். இந்த பிரச்னைக்கு தீர்வு காண எங்கள் மருத்துவர்கள் தீவிரமாக உழைத்து ரெஸ்வெராட்ரோல் மற்றும் காப்பர் (R+Cu) கொண்ட புரோ-ஆக்ஸிடன்ட் மாத்திரைகளை கண்டறிந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com