Ahmedabad Plane Crash|தலா ரூ.1 கோடி இழப்பீடு அறிவித்த டாடா குழுமம்!
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 12 பணியாளர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தில் இருந்து விமானம் லண்டனுக்கு மதியம் 1.38 மணியளவில் விமானம் புறப்பட்ட நிலையில், 10 நிமிடங்களில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் தீ பற்றிக் கரும்புகை வெளியானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதில் விமானத்தில் இருந்த ஒரு பயணியை தவிர மீதமிருந்த 241 பேரும் உயிரிழந்துள்ளனர் .
மேலும், விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானம் மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி கட்டடத்தில் மோதியதில், 7 பேர் உயிரிழந்துள்ளது இதுவரை உறுதியாகியுள்ளதாக, அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
5 இளநிலை மருத்துவ மாணவர்கள், ஒரு முதுகலை மருத்துவ மாணவர், ஒரு மருத்துவரின் மனைவி ஆகியோர் உயிரிழந்துள்ளதாகவும், 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்திருப்பதாகவும், அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், விடுதி கட்டடத்திலிருந்தவர்களில், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது தனது தொழில் வாழ்க்கையில் மிக மோசமான நாள் என்று வேதனை தெரிவித்துள்ள டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அளிப்பதாக அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களின் மருத்துவச் செலவை ஏற்பதாகவும், விபத்தில் சேதமடைந்த மருத்துவக் கல்லூரி விடுதி கட்டித் தரப்படும் எனவும் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள டாடா குழுமம், " அகமதாபாத் நகரிலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறேன். இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான தருணத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை ஆதரிப்பதில் முழு கவனம் செலுத்துகிறோம்.
சம்பவம் நடந்த இடத்தில் அவசரகால மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கும், பாதிக்கப் பட்டவர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். மேலும் விபத்து தொடர்பாக கிடைக்கும் தகவல்கள் உடனுக்குடன் பகிரப்படும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உதவ அவசரகால மையம் திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் ." என சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.