நாட்டிலேயே தொழிற்சாலைகளில் டாப் தமிழகம்தான்: ரிசர்வ் வங்கி
நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகள் தொடர்பாக 2016-17 ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவர தகவல் குறிப்பேட்டில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள மொத்தத் தொழிற்சாலைகளில் 16 சதவிகிதம் ஆலைகள் தமிழ்நாட்டில்தான் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இருப்பினும், முதலீடுகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பொருத்தவரையில் குஜராத் முதலிடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. கடந்த 2008-2009ல் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இந்தியாவில் இந்த ஐந்து மாநிலங்களிலும் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. 2010-11 நிதியாண்டில் தொழிற்சாலைகளைப் பொருத்தவரையில் மகாராஷ்டிரா 43 புள்ளி 35 சதவிகித வளர்ச்சியையும், குஜராத் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முறையே 37புள்ளி 5 சதவிகிதம் மற்றும் 37 சதவிகித வளர்ச்சியையும் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 2006-07 புள்ளி விவரங்களின்படி, உத்தரப் பிரதேச மாநிலம் சிறு, குறு தொழிற்சாலைகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அங்கு 44 லட்சத்து 3 ஆயிரம் சிறு,குறு தொழிற்சாலைகள் உள்ளன. அதற்கு அடுத்த இடங்களில், மேற்கு வங்கத்தில் 34 லட்சத்து 64 ஆயிரம், தமிழ்நாட்டில் 33 லட்சத்து 13 ஆயிரம் மற்றும் மகாராஷ்ட்ராவில் 30 லட்சத்து 60 ஆயிரம் சிறு குறு தொழிற்சாலைகளும் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் புள்ளி விவர குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.