ஆதரவற்ற குழந்தைகளை பராமரிப்பதில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு
நாட்டிலேயே ஆதரவற்ற குழந்தைகளை காப்பாற்றுவதற்காக அதிக உதவி மையங்களை அமைத்து பராமரிக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
ஆதரவற்ற குழந்தைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை மக்களவையில் மத்திய குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், நாட்டில் ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 476 மையங்கள் செயல்படுவதாகவும், அவை மூலம் 64 ஆயிரத்து 364 குழந்தைகள் பராமரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் தான் 189 மையங்கள் செயல்படுவதாகவும், அவை மூலம் சுமார் 11 ஆயிரத்து 900 குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கூறியிருக்கிறது.
குறிப்பாக இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் வெறும் 77 மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 3162 குழந்தைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் 85 மையங்களில் 2 ஆயிரத்து 459 குழந்தைகள் பலனடைந்து வருகிறார்கள்.
கர்நாடகா, மேற்கு வங்கம், ஆந்திரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல பெரிய மாநிலங்கள் கூட தமிழகத்தை விட இரண்டு மடங்கு குறைவாகத்தான் மையங்களை அமைத்து குழந்தைகளை பராமரித்து வருகிறது.