ஓங்கி ஒலித்த குரல்கள் | திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விகள்!
”வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியாவைப் பழிவாங்குகிறதா அமெரிக்கா?” - திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா கேள்வி
கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க இறக்குமதிகள் மற்றும் இந்தியாவின் ஏற்றுமதிகள் மீதான வரிகள் தொடர்பாக அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்த விவரங்கள் கேட்டு நாடாளுமன்றத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க அமெரிக்கா நிர்ணயம் செய்திருந்த காலக்கெடு என்ன? இந்தியாவிலிருந்து குறிப்பிட்ட ஆட்டோ மொபைல்கள் மற்றும் உதிரிப் பாகங்களின் இறக்குமதி மீதான வரிகளை அமெரிக்கா சமீபத்தில் அதிகரித்திருக்கிறதா? GATT கொள்கைகளுக்கு எதிரானது என்பதால், WTO-வில் இந்தியா தனது எதிர்ப்பைப் பதிவு செய்ததா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? அமெரிக்காவை, பழிவாங்கும் நோக்கில் அபராதங்கள் விதித்து சலுகைகளை நிறுத்துமா?
“விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு... தடுக்கத் தவறிய ஒன்றிய அரசு” - திமுக எம்.பி. ஆர்.கிரிராஜன் குற்றச்சாட்டு
கடந்த ஒரு வருடத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் உள்நாட்டுப் பொருட்களின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்ததைக் கண்டுகொள்ளாத ஒன்றிய அரசை குற்றம்சாட்டி நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். விலை உயர்வு நெருக்கடியையும் அதன் தாக்கத்தையும் குறைக்க அரசு ஏன் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் அரசு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதல் உணவுத் தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஒதுக்கீடு செய்துள்ளதா? அப்படியானால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக நடுத்தர வர்க்க மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் அவற்றைத் தணிக்க அரசு எடுத்த பொருத்தமான நடவடிக்கைகள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.
"உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிக்கான பிரதிநிதித்துவம் என்ன" என்பது குறித்து தேனி திமுக எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் கோவை திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
”தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கும் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியுள்ளது. அதைத் தொடர்ந்து திராவிட மாடல் அரசின் இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து திமுக மக்களவை உறுப்பினர்கள் தங்க தமிழ்செல்வன் மற்றும் கணபதி ராஜ்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
”எஃகு இறக்குமதியில் சீனாவைச் சார்ந்திருப்பது ஏன்” என தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.
”இந்தியாவில் கச்சா எஃகு உற்பத்தியை தற்போதுள்ள 8 மெட்ரிக் டன் உற்பத்தியில் இருந்து 2030ஆம் ஆண்டுக்குள் உற்பத்தியை 255 மெட்ரிக் டன்னாகவும், மொத்த கச்சா எஃகு திறனை 300 மெட்ரிக் டன்னாகவும் உயர்த்துவது குறித்து ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் என்ன எனக் கேட்டு நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் மொத்த எஃகு இறக்குமதியில் சீன எஃகு 70% க்கும் அதிகமாக இருந்தது என்பது உண்மையா? அப்படியானால், எஃகு இறக்குமதியில் சீனாவை அதிகமாகச் சார்ந்திருப்பதைக் குறைக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.
”போலி பயனாளிகளுக்கு அனுப்பிய ரூ. 3000 கோடி. PM-KISAN திட்டத்தின்கீழ் பணம் மோசடி. நடவடிக்கை என்ன” என தஞ்சாவூர் திமுக எம்.பி. முரசொலி கேள்வி எழுப்பியுள்ளார்.
2019 முதல் PM-KISAN திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு அனுப்பப்பட்ட பணம் குறித்த விவரங்கள் கேட்டு திமுக மக்களவை உறுப்பினர் முரசொலி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அங்கீகரிக்கப்படாத பயனர் பெயர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தகுதியற்ற பயனாளிகளுக்கு ரூ.3000 கோடிக்கு மேல் அனுப்பப்பட்டுள்ளது ஏன் என்று கேட்ட அவர், அத்தகைய அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
”புதிய கிராமப்புறச் சாலைகள் அமைப்பது எப்போது” என ஆரணி திமுக எம்.பி. தரணிவேந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
”பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா (PMGSY)திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட சாலைகளின் நீளம் உட்பட கட்டப்பட்ட, மேம்படுத்தப்பட்ட மற்றும் முடிக்கப்பட்ட மொத்த கிராமப்புறச் சாலைகளின் எண்ணிக்கை என்ன என்று கேட்டு நாடாளுமன்றத்தில் ஆரணி மக்களவை உறுப்பினர் தரணிவேந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு.
கடந்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் தார்ச் சாலைகள் இடப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை என்ன?
PMGSYஐc செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட, வெளியிடப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி எவ்வளவு, குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்து வரும் திட்டங்களின் நிலை என்ன?
PMGSYஇன்கீழ் சாலை கட்டுமானத்தில் சிறந்த நீடித்துழைப்பு, தரநிலை, செலவு-செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதுமைகள் அல்லது புதிய தொழில்நுட்பங்கள் என்ன?
PMGSYஇன்கீழ் கட்டப்பட்ட சாலைகளின் பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், ஏற்கெனவே உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
”திருப்பூர் தொழிற்சாலைகளில் ஜிஎஸ்டியின் தாக்கம் மீட்பு நடவடிக்கை என்ன” என அரக்கோணம் எம்.பி.ஜெகத்ரட்சகன்கேள்வி எழுப்பியுள்ளார்.
”திருப்பூரின் சிறு மற்றும் நடுத்தர ஜவுளி நிறுவனங்களில் ஜிஎஸ்டியின் தாக்கம் குறித்து அரசாங்கம் நடத்திய ஆய்வுகள் பற்றி அரக்கோணம் மக்களவை திமுக உறுப்பினர் ஜெகத்ரட்சகன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். நமது நாட்டிற்கு வங்கதேச ஜவுளி இறக்குமதியைக் குறைக்க/கட்டுப்படுத்த பரிசீலிக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் நமது ஜவுளி ஏற்றுமதிகளுக்கு பயனளிக்கும் வகையில் அவற்றுடன் கட்டண சமநிலை சிக்கல்களைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? பருத்தி பின்னலாடைகளைச் சேர்க்க தற்போதைய உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து அரசாங்கம் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளதா? அப்படி பெற்றிருந்தால் அப்பிரதிநிதித்துவத்தின் தற்போதைய நிலை என்ன?
”வாழைப்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை என்ன” என காஞ்சிபுரம் திமுக எம்.பி. செல்வமும், திருவண்ணாமலை திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரையும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வாழைப்பழ ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் மாநில அரசுகளுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு உதவிகள் வழங்குகிறதா என்று திமுக மக்களவை உறுப்பினர்கள் செல்வம் மற்றும் சி.என்.அண்ணாதுரை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்பட்ட திட்டங்கள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், உள்கட்டமைப்பு ஆதரவு அல்லது ஏற்றுமதி மானியங்கள் உள்ளிட்ட விவரங்கள் என்ன? கடந்த மூன்று ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டிலும் ஆண்டுதோறும் ஈட்டப்பட்ட அந்நியச் செலாவணியுடன், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட வாழைப்பழங்களின் அளவு என்ன? இந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வாழைப்பழ ஏற்றுமதியை அதிகரிப்பதில் எதிர்கொள்ளும் முக்கியச் சவால்கள் என்ன?
தமிழ்நாட்டிலிருந்து வாழைப்பழ ஏற்றுமதியை ஊக்குவிக்க வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஏதேனும் குறிப்பிட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதா? அப்படியானால், கிளஸ்டர் மேம்பாடு, ஏற்றுமதி சார்ந்த பயிற்சி மற்றும் வாங்குபவர் விற்பனையாளர் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்ட விவரங்கள் என்ன? தமிழ்நாட்டிலிருந்து வாழை ஏற்றுமதியை ஆதரிக்க வாழை விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு ஏதேனும் நிதி உதவி அல்லது ஊக்கத்தொகை வழங்கப்படுகிறதா, அப்படியானால், அதன் விவரங்கள்?
”வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதற்கு மானியம் என்ன” என வட சென்னை திமுக எம்.பி. டாக்டர் கலாநிதி வீரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
”செயற்கை நுண்ணறிவு (AI), வேளாண்மையில் துல்லிய தொழிநுட்பம், ட்ரோன் தொழில்நுட்பம், காலநிலைக்கேற்ப மாறும் திறன் மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்ற விவசாயத்தில் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வட சென்னை திமுக மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முன்னோடித் திட்டங்கள் அல்லது முயற்சிகளின் விவரங்கள் என்ன? விவசாயிகள், குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் இந்த தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதற்கு அரசாங்கம் அளிக்கும் நிதி ஊக்கத்தொகை, தொழில்நுட்ப ஆதரவு அல்லது பயிற்சித் திட்டங்களை என்ன?
2019ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் வேளாண்மை இயக்கம், வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் (SMAM) மற்றும் கிருஷி இயந்திர மானியத் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட மொத்த நிதி என்ன?தொழில்நுட்பம் சார்ந்த விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்க ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் அல்லது தமிழ்நாடு மாநில அரசுடன் ஒன்றிய அரசு இணைந்து செய்யும் நடவடிக்கைகள் என்ன” என்றும் அவர் கேட்டுள்ளார்.