விரைவுச் செய்திகள்: உள்ளாட்சித் தேர்தல் | குட்கா விற்பனை | சீனாவில் புயல் தாக்கம்

விரைவுச் செய்திகள்: உள்ளாட்சித் தேர்தல் | குட்கா விற்பனை | சீனாவில் புயல் தாக்கம்
விரைவுச் செய்திகள்: உள்ளாட்சித் தேர்தல் | குட்கா விற்பனை | சீனாவில் புயல் தாக்கம்

உள்ளாட்சித் தேர்தல் - இன்று ஆலோசனை: 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக தமிழக அரசு இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஒட்டுக்கேட்பு புகார் - இந்து என்.ராம் வழக்கு: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு புகார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம், ஏசியாநெட் நிறுவனர் சசிகுமார் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமித் ஷாவை சந்திக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்?: பிரதமர் மோடியுடனான ஆலோசனையை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சொந்தக் கட்சியினரே எதிராக செயல்பட்டனர்: தேர்தலில் சொந்தக் கட்சியினரே தமக்கு எதிராக செயல்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றச்சாட்டி இருக்கிறார். பஞ்சாயத்து தேர்தல் முடிந்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருக்கிறார்.

தேர்தல் தோல்வி - அன்வர் ராஜா புதிய குற்றச்சாட்டு: சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்களை தலைவர்கள் பயன்படுத்தாததே காரணம் என அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா குற்றம்சாட்டி இருக்கிறார்.

நீரில் பாலம் மூழ்கியதால் மக்கள் பாதிப்பு: பவானிசாகர் நீர்த்தேக்கப் பகுதியில் உயர்மட்டப் பாலம் நீரில் மூழ்கியது. இதனால் ஆபத்தான முறையில் பரிசலில் மக்கள் பயணிக்கின்றனர்.

குட்கா விற்பனை- 45 பேர் கைது: சென்னையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையாக 45 பேர் கைது செய்யப்பட்டனர். மூன்றே நாட்களில் இரண்டரை டன் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் சிக்கின.

அசாம் காவல்துறையினர் 6 பேர் பலி: அசாம்- மிசோரம் இடையிலான எல்லை பிரச்னை தொடர்பான வன்முறையில் 6 காவல்துறையினர் பலியாகினர். பதற்றம் நீடிக்கும் நிலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

4 லட்சத்துக்கு கீழ் குறைந்த கொரோனா சிகிச்சை: நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது. ஒரேநாளில் 43,363 பேர் குணமடைந்தனர்.

எடியூரப்பா ராஜினாமா - புதிய முதல்வர் யார்?: கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து பாஜக மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

மைசூர் பருப்பு மீது இறக்குமதி வரி ரத்து: மைசூர் பருப்பு மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டது. உள்நாட்டில் விலையை கட்டுப்படுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வுப் பகுதி: வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் தேங்கிய மழைநீர்: தலைநகர் டெல்லியில் காலையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

உணவின்றி தவிக்கும் லாரி ஓட்டுநர்கள்: மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை தொடர்கிறது. பெங்களூரு - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் தமிழக லாரி ஓட்டுநர்கள் 4 நாட்களாக உணவின்றி தவித்துவருகின்றனர்.

கூடுதலாக ரூபாய் நோட்டுகளை அச்சிட வாய்ப்பில்லை: பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கூடுதலாக ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்திருக்கிறார்.

சத்தீஸ்கரில் நக்சல் தளபதி கைது: சத்தீஸ்கரில் CRPF வீரர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நக்ஸலைட் தளபதி கைது செய்யப்பட்டார். 2013 ஆம் ஆண்டு முதல் பல குற்றங்களுக்காக தேடப்பட்டவர் என காவல்துறை தெரிவித்திருக்கிறது.

சீனாவில் தொடரும் புயலின் தாக்கம்: கிழக்கு சீனாவில் இரண்டாவது முறையாக IN-FA புயல் கரையை கடந்தது. அங்கு கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

அமெரிக்கா உடனான உறவு; சீனா நிபந்தனை: அமெரிக்கா உடனான உறவைப் புதுப்பிக்க, சீன கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை சீனா விதித்திருக்கிறது.

ஒலிம்பிக் - இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெற்றி: டோக்கியோ ஒலிம்பிக் லீக் ஆட்டத்தில் ஸ்பெயினை வீழ்த்தியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் 3க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

சவுரப் சவுத்ரி இணை 2வது சுற்றில் தோல்வி: ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பேக்கர்- சவுரப் சவுத்ரி இணை 2வது சுற்றில் தோல்வியடைந்தனர். மற்றொரு இந்திய இணையான யசஷ்வினி தேஸ்வால் - அபிஷேக் வர்மா இணை வெளியேறியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com