“15 நாளில் தெலுங்கு கற்பேன்” - தெலங்கானா ஆளுநர் தமிழிசை
தெலங்கானா ஆளுநராக பதவியேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன், அடுத்த 15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று, அம்மாநில மக்களுடன் சரளமாக உரையாடப் போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆளுநராக கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சந்தித்து பேசினார். அனைவரிடமும் தாம் நட்பாக பழக எண்ணம் கொண்டிருப்பதாகவும், அதேசமயம் அதிகாரிகள் கடமைகளை சரிவர செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தினசரி தாம் யோகா செய்து வருவது போல, ஆளுநர் மாளிகை ஊழியர்களும் யோகா செய்து உடல்நலத்தை பேணி காக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஆளுநராக பதவியேற்பதற்கு முன், தெலங்கானாவின் சமூக பொருளாதார பிரச்னைகள் குறித்து தாம் தெரிந்து கொண்டதாகவும், அதன் அடிப்படையில் தமது பணி இருக்கும் என்றும் கூறினார்.
மேலும் அடுத்த 15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று, அம்மாநில மக்களுடன் சரளமாக உரையாடப் போவதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.