பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அக்கறை காட்டாத தமிழக அரசு
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் நிர்பயா திட்ட நிதியைப் பெறுவதில், தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் 421 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், 1361 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும், 65 வரதட்சணை கொடுமையால் ஏற்பட்ட மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில், நிர்பயா நிதியிலிருந்து நிதி ஒதுக்குமாறு தமிழகம் மத்திய அரசைக் கேட்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைப் பெறுவதற்கு அடிப்படையான, தனது கருத்தைக் கூட மாநில அரசு தெரிவிக்கவில்லை என்றும் மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1000 கோடி ரூபாயை மத்திய அரசு நிர்பயா நிதிக்காக ஒதுக்கியுள்ளது. இந்த நிதியின் மூலம் 10 லட்சத்திற்கும் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பொதுப்போக்குவரத்தைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறைகளை மாநில அரசு ஏற்படுத்திக் கொள்ள முடியும். இந்த வரையறையின் கீழ், தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்கள் வருகின்றன.
டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, மத்திய அரசு 1000 கோடி ரூபாய் நிதியை நிர்பயா நிதி என்ற பெயரில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. நிர்பயா என்பதற்கு பயமற்றவள் என்று பொருளாகும்.