டெல்லி அரசின் இலவச யாத்திரை திட்டத்தில் தமிழகத்தின் "வேளாங்கண்ணி" - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி அரசின் இலவச யாத்திரை திட்டத்தின் பட்டியலில் தமிழகத்தின் "வேளாங்கண்ணி" தளமும் சேர்க்கப்பட்டுள்ளது என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா திட்டத்திற்கு கடந்த 2018-ம் ஆண்டு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முக்கிய மந்திரி தீர்த்த யாத்திரா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பூரி, ராமேஸ்வரம், சீரடி, ஹரித்வார், மதுரா மற்றும் திருப்பதி உள்ளிட்ட 13 இடங்களுக்கு இலவசமாக ஆன்மீக சுற்றுலா அனுப்பப்பட்டது. இதற்கு ஏற்படும் அனைத்து செலவுகளையும் டெல்லி அரசு ஏற்றுக்கொண்டது.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய டெல்லியில் வசிக்கக்கூடிய 60 வயதை கடந்து மூத்த குடிமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் சான்றிதழை பெற்று இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன் பெறலாம். இதுவரை 35,000-க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தின் கீழ் ஆன்மீக சுற்றுலாவாக பல்வேறு மாநிலங்களில் உள்ள தலங்களுக்கு டெல்லி அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற டெல்லி அமைச்சரவை கூட்டத்தில் இத்திட்டத்தில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி மற்றும் தமிழகத்தின் வேளாங்கண்ணி ஆகியவை தளங்களை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் டிசம்பர் 3-ம் தேதி டெல்லியில் இருந்து 1000 பயணிகளுடன் முதல் யாத்திரை ரயிலானது அயோத்திக்கு புறப்படுகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது."முக்கிய மந்திரி தீர்த்த யாத்திரா யோஜனா" எனும் திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கானோர் பதிவு செய்து வருகிறார்கள். அவர்களுக்கு பதிவு செய்யும் தேதியின் முன்னுரிமை அடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் இலவச பயணங்களை மேற்கொள்ள அனுமதிப்பதாகவும் இத்திட்டத்தில் செல்லும் மூத்த குடிமக்கள் ஒருவருடன் 21 வயது பூர்த்தி அடைந்த ஒரு உதவியாளரும் செல்லலாம் அவர்களுக்கான முழு செலவையும் டெல்லி அரசே ஏற்கும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.