ஜல்லிக்கட்டு மீது ஆர்வமுள்ள விவசாயி ஒருவர் தனக்கு பிடித்த காளையை ரூ.10 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹவேரி பகுதியில் நரசிம்ஹா என்றால் எல்லாருக்கும் தெரியும். அது ஆள் இல்லை, காளை. அமராவதி இனமான நரசிம்ஹாவின் உரிமையாளர் ரெவனசிதப்பா. ஹவேரி சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் காளை தொடர்பான அனைத்து விதமான போட்டிகளிலும் நரசிம்ஹா தான் கில்லி. 250 மீட்டரை 9 நொடிகளுக்குள் ஓடி கடக்கும் இந்த நரசிம்ஹா. இப்படி பல புகழுக்குச் சொந்தமான காளை நம்ம ஊர் ஜல்லிக்கட்டுக்கு வந்தால் எப்படி இருக்கும்?
தமிழகத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலரும், விவசாயியுமான செல்வம் என்பவர் நரசிம்ஹா பற்றி கேள்விப்பட்டு அதனை வாங்க முயற்சி செய்துள்ளார். அதனை தன்னிடம் விற்குமாறு பலமுறை ரெவனசிதப்பாவிடம் கேட்டுள்ளார் செல்வம். கடைசியாக ரூ.10 லட்சம் கொடுத்து காளையை தனக்கு உரிமையாக்கியுள்ளார் செல்வம்.
காளை குறித்து பேசிய ரெவனசிதப்பா, நரசிம்ஹா மற்ற காளைகளை போல் கிடையாது. இது அமராவதி இனம். 250 மீட்டர் தூரத்தை 9 நொடிகளுக்குள் கடந்துவிடும். முறையாக பயிற்சி பெற்ற காளை. இன்று வரை தினமும் பயிற்சியில் உள்ளது. ஒரு நாளைக்கு 5 முதல் 10 கிமீ ஓட்டப்பயிற்சி செய்கிறது. 8 வயதாகும் நரசிம்ஹா தற்போது 5 அடி உயரம், 600 கிலோ எடை உள்ளது. பார்வை, சுவாசம் எல்லாம் கூர்மை.
கர்நாடகாவில் காளைகள் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வியாபாரம் ஆகின்றன. ஆனால் ரூ.10 லட்சத்துக்கு ஒரு காளை விற்கப்பட்டது இதுவே முதல்முறை என்கிறார்கள். கர்நாடகாவை கலக்கிய நரசிம்ஹா இனி தமிழகத்தையும் ஒரு கலக்கு கலக்கும் என்கிறார் காளையை வாங்கியுள்ள செல்வம். ஜல்லிக்கட்டு ட்ராக்கில் ஓட நரசிம்ஹா என்ற உசேன் போல்ட் களம் இறங்கிவிட்டார் என்கிறார்கள் ஜல்லிக்கட்டு பிரியர்கள்.