மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழக அரசு திட்டம்
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு எதிராக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் முறையிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது தற்போது காவிரியில் தண்ணீர் திறந்துவிட இயலாது என்றும் நல்ல மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் திறந்து விட முடியும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் காவிரி ஆணையத்தின் கூட்டம் மசூத் ஹுசைன் தலைமையில் நாளை டில்லியில் நடைபெற உள்ளது. இதில், மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக்கூடாது என கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு பிரதிநிதிகள் வலியுறுத்த உள்ளனர்.
கர்நாடக அரசு ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் எனவும் தமிழக அரசு வலியுறுத்த உள்ளது. கர்நாடகாவில் வறட்சி நிலவுவதாக கர்நாடகா அரசு தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், ஜூன் மாதத்துக்கான தண்ணீர் திறப்பை கர்நாடகா தாமதப்படுத்தக் கூடாது என தமிழக அரசின் மூத்த அதிகாரிகள் காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் கோரிக்கை வைக்க உள்ளனர்.
இந்த கூட்டத்தில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை செயலாளர் பிரபாகரன் மற்றும் மூத்த பொறியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு காவிரி ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் மீண்டும் நாளை கூடுகிறது. ஆகவே முதல் முறையாக அதிகாரபூர்வமாக காவேரி ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளது.
ஏற்கனவே சென்ற வாரம் நடந்த காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில் மழைப்பொழிவு நிலவரம், தற்போது உள்ள தண்ணீர் இருப்பு, எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது போன்ற விவரங்கள் அனைத்தும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. தமிழகம். கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளாவைச் சேர்ந்த பொறியாளர்கள் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு விவரங்களை அளித்தார்கள்.
இந்த விவரங்களின் அடிப்படையிலேயே காவிரி ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதாலும், மேட்டூர் அணையில் நீர் இருப்பு அளவு மிகவும் குறைந்து விட்டதாலும், கர்நாடகா ஜூன் மாதத்துக்கான நீரை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எந்த தாமதமும் இன்றி திறந்து விட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்த உள்ளது.
மேட்டூர் அணையில் 48 அடி தண்ணீர் மட்டுமே உள்ள நிலையில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே குடி தண்ணீர் தேவை மட்டுமாவது சமாளிக்க தமிழக அரசால் முயற்சி செய்ய முடியும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.