மைசூர் சேண்டல்: பிராண்ட் அம்பாசிடர் தமன்னா! – எதிர்க்கும் மக்கள் – காரணம் என்ன?
E. இந்து
கர்நாடக அரசின் சார்பில் “கர்நாடகா சோப்புகள் மற்றும் டிடர்ஜெண்டுகள் நிறுவனம்” செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனம் மூலம் தயாராகும் “மைசூர் சேண்டல்” சோப்புகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பல்வேறு நாடுகளில் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவன தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, கர்நாடகாவின் சிறு, குறு நிறுவனங்களின் அமைச்சர் எம்.பி.பாட்டில் நேற்று (மே 22) வெளியிட்ட அறிவிப்பில், “கர்நாடகா சோப்புகள் மற்றும் டிடர்ஜெண்டுகள் நிறுவனத்தின் (கே.எஸ்.டி.எல்) தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக அரசிற்கு சொந்தமான நிறுவனத்தின் உலகளாவிய அனுகலை எளிமைப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடிகை தமன்னா, இந்த நிறுவனத்தின் மீது அதிக ஈர்ப்பு கொண்டுள்ளார், மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் இளைய தலைமுறையினருடன் விரைவில் இணையும் திறனை நடிகை தமன்னா கொண்டுள்ளார். எனவே, கே.எஸ்.டி.எல் நிறுவனத்தின் தூதராக நடிகை தமன்னா இரண்டு ஆண்டுகள் செயல்படுவார். இதற்காக அவருக்கு ரூ.6.2 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “2024-25ஆம் நிதியாண்டில் கே.எஸ்.டி.எல் நிறுவனம் ரூ.1,785.99 கோடி வரை வருமான ஈட்டியுள்ளது. இதில் கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 80 சதவீத வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் இந்த நிறுவனத்தின் வருவாயை ரூ.5,000 கோடியை எட்டுவதே எங்கள் இலக்காகும்.
இந்தியாவின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, கியாரா அத்வானி ஆகியோரிடம் நிறுவனத்தின் தூதராக இருப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில்தான், தமன்னா இந்தியா முழுவதும் அறியப்பட்டவராக உள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் தமன்னாவை சுமார் 28 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின்பற்றுவதும் தெரிந்தது. இதனைத் தொடர்ந்தே, தமன்னா தான் இதற்கு பொருத்தமாக இருப்பார் என்று தேர்வு செய்யப்பட்டார்” எனக் கூறினார்.
எதிர்க்கும் மக்கள்
இந்நிலையில், அமைச்சர் எம்.பி.பாட்டிலின் அறிவிப்பை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில், “கர்நாடக அரசின் நிறுவனத்திற்கு எதற்காக வேறு மொழி பேசும் பெண் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்றும், “கர்நாடகாவில் கதாநாயகிகள் இல்லையா, எதற்காக தமன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார்” என்றும் பலர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு எக்ஸ் வலைதளத்தில் பதிலளித்த அமைச்சர் எம்.பி.பட்டேல், “கே.எஸ்.டி.எல் . நிறுவனம் கன்னட திரைப்படத் துறையின் மீது மிக்க மரியாதையை கொண்டுள்ளது. கன்னட திரைப்படங்கள் பல பாலிவுட் படங்களுக்கு போட்டியாக உள்ளன. ஆனால், மைசூர் சேண்டல் சோப்பு நிறுவனத்தின் நோக்கம், கர்நாடகாவைத் தாண்டி அதன் சந்தை மதிப்பை அதிகரிக்கப்பதுதான். எனவே, பல்வேறு நிபுணர்களிடம் கலந்தாலோசித்தப்பிறகு தான், நடிகை தமன்னாவை தூதராக தேர்ந்தெடுத்துள்ளோம்” என விளக்கம் கொடுத்துள்ளார்.