"வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் மட்டுமே பேச்சுவார்த்தை" விவசாய சங்கங்கள் அறிவிப்பு !

"வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் மட்டுமே பேச்சுவார்த்தை" விவசாய சங்கங்கள் அறிவிப்பு !
"வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் மட்டுமே பேச்சுவார்த்தை" விவசாய சங்கங்கள் அறிவிப்பு !

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் மட்டுமே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என போராட்டம் நடத்தி வரும் விவசாய அமைப்புகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

டெல்லி எல்லையில் போராட்டம் நடந்து வரும் சிங்கு என்ற பகுதியில் விவசாய அமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விவசாய அமைப்பின் தலைவர் கன்வல்பிரீத் சிங் பன்னு, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் எப்போதும் தயார் என்றும் ஆனால் அதற்கு முன் சட்டங்கள் வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ராஜஸ்தானிலிருந்தும் உத்தரப்பிரதேசத்திலிலும் நாளை ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பேரணி செல்லும் விவசாயிகளுடன் பிற மாநில விவசாயிகளும் இணைந்து கொள்வார்கள் என்றும் சில நாட்களில் இப்போராட்டம் பிரமாண்டமானதாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார். நாளை மறுநாள் விவசாயிகள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளதாகவும் கன்வல்பிரீத் சிங் தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டத்தை வலுவிழக்க செய்ய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் ஆனால் அதற்கு தாங்கள் இடம் கொடுக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகளும் இடதுசாரிகளும் ஊடுருவிவிட்டதாக மத்திய உணவுத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் குற்றஞ்சாட்டியுள்ளார். தேச விரோத செயல்களுக்காக சிறையில் தள்ளப்பட்டவர்களை விடுவிக்க இவர்கள் முழக்கங்கள் எழுப்பி வருவதாகவும் அமைச்சர் கோயல் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com