டெல்லி செங்கோட்டையும் அடிமை சின்னம்தான்: சமாஜ்வாதி தலைவர் கருத்து
தாஜ்மகால் அடிமையின் சின்னம் என்றால் செங்கோட்டை, நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை ஆகியவையும் அடிமைச் சின்னங்கள்தான் என சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம்கான் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் தாஜ்மகால் பெயர் நீக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்தது. இதனிடையே உத்தரப்பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம், தாஜ்மகால் இந்திய கலாச்சாரத்தின் மீது படிந்துள்ள கறை என்றும் அது துரோகிகளால் கட்டப்பட்டது எனவும் அடிமைச் சின்னம் எனவும் கூறியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம்கான், தாஜ்மகால் அடிமையின் சின்னம் என்றால் குதுப்மினார், செங்கோட்டை, நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை எல்லாமே அடிமையின் சின்னங்கள்தான். தாஜ்மகாலை இடிக்க வேண்டுமென்றால் இவை அனைத்தையுமே இடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.