கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் பரபரப்பாக 2023-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் கடந்த திங்கள்கிழமையுடன் நிறைவடைந்துள்ளது. இந்த சீசனில், தோனி தலைமையிலான சென்னை அணி, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை தட்டிச் சென்று, மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.
கிரிக்கெட் போட்டியை பரபரப்பாக பார்த்துக் கொண்டிருக்கும்போது அதனுடன் சுட சுட நமக்கு பிடித்த உணவும் வந்தால் அந்த தருணமே வேற லெவலில் இருக்கும். அப்படி, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஸ்விக்கி, நடப்பு ஐபிஎல் தொடரின்போது வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிரியாணி உணவே முதல் விருப்பமான உணவாக இடம் பிடித்து கோப்பையை தட்டிச் சென்றதாகவும், ஒரு நிமிடத்தில் 212 பிரியாணி ஆர்டர்கள் வந்ததாகவும், ஸ்விக்கி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த சீசனில் 12 மில்லியனுக்கும் (1.2 கோடி) அதிகமான ஆர்டர்கள் வந்ததாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், ஐபிஎல் தொடரின்போது சிக்கன் பிரியாணி, பட்டர் நான் (butter naan), மசாலா தோசை ஆகிய உணவுகளே முதல் 3 விருப்பமான உணவுகளாக இருந்ததால், அதன் ஆர்டர் விகிதம் 30 சதிவிகிதம் உயர்ந்ததாகவும் ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஐபிஎல் ஸ்பெஷல் மெனுக்கள், குறிப்பாக காம்போ உணவுகள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதாகவும் அந்நிறுவனம் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளது.
2023-ம் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் பிரியாணி உணவே அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டது. கடந்த 7 வருடங்களாக வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான உணவுகளில் பிரியாணி உணவே முதலாவதாக இருந்து வருவதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.