
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, முதன்முதலாக திருநங்கை ஒருவரை முக்கிய பொறுப்பில் நியமனம் செய்துள்ளது
புகழ்பெற்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் ஸ்விக்கியும் ஒன்று. பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொண்டுள்ள ஸ்விக்கி நிறுவனம் தற்போது திருநங்கை ஒருவரை முக்கிய பொறுப்பில் நியமனம் செய்துள்ளது. தமிழகத்தில் பிறந்து ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொழில்நுட்பம், பேஷன் சார்ந்த பணிகளைச் செய்த திருநங்கை சம்யுக்தா விஜயன் தற்போது ஸ்விக்கி நிறுவனத்தில் முதன்மை திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வேலைபார்த்த சம்யுக்தா 2017ம் ஆண்டு இந்தியா திரும்பினார். அமேசான் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த அவர், பின்னர் சொந்தமாக பேஷன் தொடர்பான ஸ்டார்டப் நிறுவனத்தை நிர்வகித்துள்ளார். தற்போது சம்யுக்தா, ஸ்விக்கியின் முதன்மை திட்ட மேலாளராக பணியில் அமர்ந்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சம்யுக்தா விஜயன், ''மூன்றாம் பாலினத்தவர்கள் பலரும் கல்வித்தகுதியில் பின் தங்கியுள்ளனர். எனக்கு குடும்பத்தின் ஆதரவு இருந்தது. அதனால் நான் மேற்கொண்டு முன்னேறினேன். தகுதி வாய்ந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். படிப்பறிவற்ற மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சரியான பயிற்சித்திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். நான் பொறுப்பேற்றுள்ள ஸ்விக்கி நிறுவனம், தகுதி வாய்ந்த மூன்றாம் பாலினத்தவர்களை ஊக்குவிக்கும்'' என தெரிவித்துள்ளார்.