`தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் பினராயி’- நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்

`தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் பினராயி’- நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்
`தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் பினராயி’- நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் தேசவிரோத நடவடிக்கைகளில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஈடுபட்டதாக தங்கக் கடத்தல் வழக்கில் முதல் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு, கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் வந்த சரக்குப் பெட்டிகளில் 30 கிலோ கடத்தல் தங்கம் இருப்பது தெரியவந்தது. இந்தக் கடத்தலில் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருக்கலாம் எனக் கருதப்பட்டதால், இவ்வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த என்ஐஏ அதிகாரிகள், இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர், பி.எஸ். சரீத் உட்பட 12 பேரை கைது செய்தனர். இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனும் கைது செய்யப்பட்டார். இதில் ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கரன் உள்ளிட்டோர் ஜாமீனில் உள்ளனர்.

இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளின் பெயர்களை வெளியிடுவேன் என ஸ்வப்னா சுரேஷ் அண்மையில் கூறியிருந்தார். அதன்படி, பணமோசடி தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று அவர் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில், தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்துள்ளார். இது கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. பினராயி விஜயன் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இந்நிலையில், தன் மீதான மற்றொரு வழக்கில் முன்ஜாமீன் கோரி ஸ்வப்னா சுரேஷ் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் முதல்வர் பினராயி விஜயனும், அவரது குடும்பத்தினரும் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனை நீதிமன்றத்தில் தெரிவிக்கக் கூடாது என முதல்வரால் அனுப்பப்பட்ட ஒருவர் என்னை மிரட்டினார். மேலும், போலீஸாராலும் நான் மிரட்டப்பட்டேன்" என அவர் கூறியுள்ளார்.

ஸ்வப்னா சுரேஷின் இந்த வாக்குமூலத்தால் முதல்வர் பினராயி விஜயனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com