ராமர் கோயில் கட்டும் தேதியை அறிவிக்காவிட்டால் தீக்குளிப்பேன்: மடாதிபதி எச்சரிக்கை!
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் தேதியை அறிவிக்கவில்லை என்றால் தீக்குளிப்பேன் என்று அயோத்தியை சேர்ந்த சாது கூறியுள்ளார்.
அயோத்தியின் தபஸ்வீ சாவ்னி கோயில் மடாதிபதி சுவாமி பரமஹன்ஸ் தாஸ். மத்திய அரசு ராமர் கோயில் கட்டுவதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று இவர், அக்டோபர் 6 ஆம் தேதி உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்ததை அடுத்து, 9 ஆம் தேதி உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
இந்நிலையில், அவர் ராமர் கோயில் கட்டுவதற்கான மத்திய அரசு அறிவிக்கவில்லை என்றால் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ’அக்டோபர் மாதம் நான் உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் ராமர் கோயில் கட்டுவதற்கான தேதி விரைவில் அறிவிப்போம் என்று உறுதி அளித்தார்.
இதனால் உண்ணாவிரத்தை கைவிட்டேன். அதோடு பிரதமர் மோடியை சந்திக்கவும் அவரிடம் நேரடியாக எனது கோரிக்கையை வைக்கவும் ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.
ஆனால் அவர் சொன்னதை நிறைவேற்றவில்லை. இப்போது மோடி அரசுக்கு ஒரு மாதம் கால அவகாசம் வழங்குகிறேன். அதாவது டிசம்பர் 5 ஆம் தேதிக்குள், பிரதமர் மோடியும் மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்தும்
ராமர் கோயில் கட்டுவதற்கான தேதியை அறிவிக்காவிட்டால், டிசம்பர் 6 ஆம் தேதி நான் தீக்குளித்து என் உயிரை மாய்ப்பேன். ராமர் கோயில் கட்டுவார்கள் என்றுதான் இந்துகள் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தார்கள். ஆனால், இன்னும் மவுனமாக இருந்தால் என்ன அர்த்தம்?’ என்றார்.