நந்திகிராமில் மம்தாவை வீழ்த்தியவர் - மேற்கு வங்க புதிய எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து யார்?

நந்திகிராமில் மம்தாவை வீழ்த்தியவர் - மேற்கு வங்க புதிய எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து யார்?
நந்திகிராமில் மம்தாவை வீழ்த்தியவர் - மேற்கு வங்க புதிய எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து யார்?

மம்தாவை தோற்கடித்த நந்திகிராம் தொகுதி எம்எல்ஏ சுவேந்து ஆதிகாரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது மேற்கு வங்க அரசியல் களத்தை மேலும் சூடு தணியாமல் பார்த்துக்கொள்ள வைத்திருக்கிறது. அவருக்கு ஏன் இந்தப் பதவி கொடுக்கப்பட்டது என்பதையும், அவர் யார் என்பதன் பின்புலத்தையும் பார்ப்போம்.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவுக்கு ஆதரவை பெறாவிட்டாலும், 77 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தது. அதிலும், நந்திகிராமில், மேற்குவங்க முதல்வர் மம்தாவை தோற்கடித்து பாஜக சார்பில் சுவேந்து ஆதிகாரி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரே இப்போது மேற்கு வங்க சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ், மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் ஆகியோர் உட்பட கட்சியின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது சுவேந்து ஆதிகாரியை ஒரு மனதாக எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்காரணமாக மேற்கு வங்க சட்டசபை தற்போது சுவேந்து ஆதிகாரி vs மம்தா பானர்ஜி என்று ஆகியிருக்கிறது.

இந்தப் போட்டி திடீரென ஒருநாளில் ஏற்படவில்லை. ஒவ்வொரு கட்டமாக மம்தா vs சுவேந்து ஆதிகாரி கட்டமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. சுவாரஸ்யமாக இப்படியாக எதிரியாக மாறுவதற்கு முன்பாக மம்தாவின் நெருங்கிய போர்ப்படை தளபதிகளில் ஒருவராக இருந்தவர் இந்த சுவேந்து ஆதிகாரி. சுவேந்து ஆதிகாரி ஒரு காலத்தில் மம்தாவின் தீவிர விசுவாசி. மம்தாவை மேற்குவங்கத்தில் ஆட்சி கட்டிலில் அமர்த்தியது 2007ல் நடந்த நந்திகிராம் கிளர்ச்சி. 2007 நவம்பர் 25 அன்று நந்திகிராமில் அரசு நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் விவசாயிகள் தன்னெழுச்சியாக போராட, அதற்கு மம்தாவும், அவரது திரிணாமுல் கட்சியும் இணைந்து கைகொடுத்தது.

அப்போது திரிணாமுல் கட்சி உறுப்பினர்கள் மீது அப்போதைய ஆளும் சிபிஎம் தொழிலாளர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அது கிளர்ச்சியாக வெடித்தது. இதுவே மம்தாவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது. இந்தப் போராட்டங்களில் மம்தாவுக்கு அனைத்துமாக இருந்தவர் இந்த சுவேந்து தான். அப்போது இருந்தே நந்திகிராம் தொகுதியின் எம்எல்ஏ சுவேந்துதான். இப்போதும் இந்த தொகுதியில் தான் தற்போது சுவேந்து எம்எல்ஏவாகவும் இருக்கிறார்.

இப்படி தீவிர விசுவாசியாக இருந்தவர், தற்போது மம்தாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். திரிணாமுல் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர், ஹுக்ளி ஆற்று பாலங்கள் வாரியத் தலைவர் என்று மம்தாவால் பதவிகளின் உச்சத்தில் உட்கார வைக்கப்பட்டார் இந்த சுவேந்து ஆதிகாரி. ஆனால் சமீபத்தில் அதாவது பிரசாந்த் கிஷோர் கட்சிக்குள் நுழைந்த பிறகு, சுவேந்துவிடம் இருந்து மாவட்டப் பொறுப்பு பதவியை பறித்தார் மம்தா. இதனால் அதிருப்தி அடைந்த சுவேந்து, மம்தா தன் மீது எடுத்த நடவடிக்கைக்கு காரணமாக இருந்தது பிரசாந்த்தான் என நினைத்து அவரை விமர்சித்து வந்தார்.

சுவேந்து ஆதிகாரி பூர்பா மெடினிபூர் மாவட்டத்திலிருந்து வந்தவர் என்றாலும், அவரது அரசியல் செல்வாக்கு முர்ஷிதாபாத், மால்டா, ஜார்கிராம், புருலியா, பாங்குரா மற்றும் பிர்பூம் ஆகிய மாவட்டங்களிலும் வெகுவாக இருக்கிறது. 2010 காலகட்டங்களில் திரிணாமுல் கட்சியை இந்த மாவட்டங்களில் சென்ற சேர்த்ததில் முக்கிய பங்கு சுவேந்துவுக்கு உண்டு. இப்படி இருந்தவர், மம்தாவுடன் ஒருகட்டத்தில் மோதல் முற்ற, திரிணாமுல் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார்.

இதையடுத்து தைரியம் இருந்தால் நந்திகிராம் தொகுதியில் தன்னை எதிர்த்து மம்தா பானர்ஜி போட்டியிடட்டும் என சுவேந்து அதிகாரி சவால் விடுத்தார். இதனால் வழக்கமாக போட்டியிடும் தொகுதியை விடுத்து நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிட்டார் மம்தா.

இந்தநிலையில் நந்திகிராமில் வாக்குப்பதிவு ஏப்ரல் 1 ம் தேதி நடைபெற்றது. இங்கு 88 சதவீத வாக்குப்பதிவு பதிவானது. இது 2016 ஐ விட 1 சதவீதம் அதிகம். இதனால் அப்போதே யார் வெற்றிபெற போகிறார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் இருந்தாலும், இறுதியில் மம்தாவை விட சுமார் 2000 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றிருந்தார் சுவேந்து.

தன்னை வளர்த்த மம்தாவையே எதிர்த்து அவரை தனது சொந்த தொகுதிக்கு வரவழைத்து தோற்கடிக்கவும் செய்து தற்போது அதே மம்தாவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர இருக்கிறார். இதனால் மேற்கு வங்க அரசியல் களம் இன்னும் பரபரப்பாகவே இருந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com