திரைப்படங்களை மிஞ்சும் நிஜ காட்சிகள் - பொலிரோவை பறக்கவிட்ட குழாய்நீர்
மகாராஷ்டிராவில் திரைப்படங்களை மிஞ்சும் வகையில், 72 இன்ச் அகலமுள்ள குழாயை உடைத்துக் கொண்டு குடிநீர் பொங்கிய காட்சிகள் மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.
பூமியில் புதைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் நிற்கும் வாகனங்கள் பல அடி உயரத்துக்கு பறக்கும் காட்சிகளை திரைப்படங்களில் அதிக அளவில் பார்த்திருப்போம். தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்திருப்பது அனைவரையும் மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குடிநீர் குழாய் உடைந்ததால், சாலை முழுவதும் தண்ணீர் தேங்கிய நிலையில், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் மெதுவாக நடந்து செல்கின்றனர். இந்தச் சூழலில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீரோ வாகனத்தை பல அடி உயரத்துக்கு மேலே தூக்கியபடி, அதிக அழுத்தத்துடன் குடிநீர் பொங்கி வெளியே வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் திரைப்படத்தில் வருவது போல, நிஜத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பாதசாரிகளும், பொதுமக்களும் அலறியடித்தபடி ஓடினர்.
மும்பையை ஒட்டியுள்ள போரிவாலி பகுதியில் திங்கட்கிழமை நள்ளிரவு ஒரு மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் சில வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. 36 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது. இந்தச் சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் தனது கேமிராவில் காட்சிகளை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.